உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

உள்ளவை இரண்டு சிற்பங்கள். இவற்றில் ஒன்று துறவியின் உருவம். இந்த உருவம் ஆடை அணிகள் இல்லாமல் கோமணத்தோடு இருக்கிறது. தலைமயிர் பின்புறமாக அடர்த்தியாகத் தொங்குகிறது. இதற்கு அடுத்த சிற்பம், ஒர் ஆள் பூக்கூடையைத் தோளின்மேல் வைத்துக்கொண்டு வளைந்த கோல் ஒன்றை இடது கையில் தாங்கித் தோளின்மேல் வைத்திருப்பது போன்ற உருவம்.

படிகளுக்குத் தெற்குப் பக்கத்திலும் இரண்டு சிற்ப உருவங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒன்று மீசை தாடிகளுடைய ஒரு முனிவர் உருவம். இதற்கு அடுத்தது இன்னொரு ஆள் உருவம்.

கருவறையின் தெற்குப் பக்கத்துச் சுவருக்கு வருவோம்.

46. திருமால் : இச் சுவரின் மத்தியில் உள்ள கோட்டத்தில் நடுநாயகமாக இருக்கிற சிற்பம் திருமால் திருவுருவம். நீண்ட மகுடம் தரித்த திருமால், நின்ற கோலமாகக் காட்சியளிக்கிறார். வலது கையில் சக்கரமும் இடது கையில் சங்கும் ஏந்தி, மற்றொரு வலது கையில் அபயமுத்திரை அறித்து இன்னொரு இடது கையை இடுப்பில் ஊன்றி இருக்கிறார்.

47. சிவன்: இதற்கு இடது பக்கத்துக் கோட்டத்தில் சிவபெரு மான் திருவுருவம் காணப்படுகிறது. நான்கு கைகள். ஒர் இடது கையை இடது பக்கத்தில் நிற்கும் குள்ளமான பூதகணத்தின் மேல் தாங்கி நிற்கிறார்.

48. காலசம்மார மூர்த்தி : இதற்கு இடது பக்கத்துக் கோட்டத்தில் இருப்பது கால சம்மார மூர்த்தி. காலன் (எமன்), சிவபெருமான் காலடியில் சோர்ந்து உட்கார்ந்திருக்கிறான். சிவபெருமான், வலது கையில் கோடரியையும் இடது கையில் பாம்பையும் ஏந்தியிருக்கிறார். மற்றொரு இடது கையில் சூலத்தைத் தலைகீழாகப் பிடித்திருக்கிறார். இன்னொரு வலதுகை உடையுண்டிருக்கிறது.

49. சிவன் : இதற்கு இடது பக்கத்தில் கடைசிக் கோட்டத்தில் இருப்பது சிவபெருமான் திருவுருவம். நின்ற நிலை. வலது கையில் செபமாலையும் இடது கையில் சாமரையும் ஏந்தியிருக்கிறார். மற்றொரு வலது கை உபதேச முத்திரை காட்டுகிறது. இன்னொரு இடது கையைத் தொங்கவிட்டிருக்கிறார்.