உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : சிற்பம் - கோயில்

163

செய்துகொண்டிருக்க அதனைச் சூழ்ந்து எலிகள் விளையாடுவது போன்றும் குரங்குகள், புலி முதலிய உருவங்களும் இச்சிற்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இவை இச்சிற்பத்தை அழகுபடுத்துவதற்காகச் சிற்பிகள் அமைத்தார்கள் என்று தோன்றுகிறது.)

அஜிதநாதர் புராணத்தில் கூறப்படுகிற சகர சக்கரவர்த்தியின் கதைக்கும், இந்தச் சிற்பத்தில் காணப்படுகிற உருவங்களுக்கும் பெரிதும் பொருத்தம் இருப்பதும், இச்சிற்பம் சகர சக்கரவர்த்தியின் கதையைக் குறிக்கிறதென்பதும் இதனால் விளக்கப்பட்டது. இந்தக் கதை, தமிழ்நாட்டிலே ஜைன மதம் சிறப்பும் செல்வாக்கும் அடைந்திருந்த அந்தக் காலத்தில் (கி. பி. 7-ஆம் நூற்றாண்டில்), எல்லோரும் அறிந்திருந்த கதையாக இருக்கவேண்டும். ஆகை யினால் தான். இக்கதையின் சிற்பத்தைச் சிற்பிகள் இப்பாறையில் செதுக்கிக் காட்டினார்கள் என்று கருதவேண்டியிருக்கிறது.

இனி, இப்பெரிய அழகிய கம்பீரமான சிற்பத்தை அமைத்ததின் நோக்கம் யாது? என்பதை ஆராய்வோம். முக்கியமான நோக்கம் இல்லாமல் இச்சிற்பத்தை அமைத்திருக்கமாட்டார்கள். இதில் ஒரு நீதி அமைந்திருக்கிறது. அது யாது? எத்தகைய பேராற்றல் உடையவராக இருந்தாலும், பெறுவதற்கு அரிய நவநிதிகளைப் பெற்றுத் தெய்வங்களின் உதவியை யடைந்திருந்தாலும், சக்கரச் செல்வனாக விளங்கிய சகர சக்கரவர்த்தியின் புதல்வராக விருந்தாலும் ஊழ்வினைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என்பதை உணர்த்தவே இச்சிற்பம் அமைக்கப்பட்டதன் நோக்கம் என்று தோன்றுகிறது. இக்கருத்தை உட்கொண்டு இக்கதையைச் சிற்பத்தில் நோக்குவோர்க்கு வகுத்தான் வகுத்த வகையல்லால், கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

என்னும் திருக்குறளின் பொருள் பசுமரத்தாணிபோல் மனத்தில் பதிகின்றது.

வற்றாத நவநிதிகளைப் படைத்துச் சக்கரச் செல்வராக வாழ்ந்த சகர சக்கரவர்த்தியின் மக்களாகப் பிறந்தும் அப்பெருஞ் செல்வ இன்பங்களை நுகர முடியாமல் இளமையிலேயே மாண்டுபோனது அவர்களுடைய ஊழ்வினைப்பயன் அல்லவா?