உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 12.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 12

சிதம்பரத்திலே இந்தக் கட்டிட அமைப்பு இருப்பதையும், அது மரத்தினால் அமைந்திருப்பதையும் இன்றும் காணலாம். மகாபலி புரத்திலுள்ள இந்த “பீம ரதம்”, பண்டைக்காலத்தில் மரத்தினால் அமைக்கப்பட்ட விகாரையின் (அம்பலத்தின்) அமைப்பைக், கல்லில் செதுக்கிக் காட்டப் பட்டிருக்கிறது. இந்தக் கட்டிடத்தில் துவாரபாலகர், தோரணங்கள், தெய்வ உருவங்கள் முதலிய சிற்பங்கள் இல்லை.

இதன் விமானத்தில் (கூரையில்) கலசங்கள் காணப்பட வில்லை. ஆனால், அவை வைக்கப்பட்டிருந்த அடையாளங்கள் காணப் படுகின்றன. கூரைபோன்ற இந்த விமானத்தின் முகசாலை களில் பௌத்த சேதியங்கள் போன்ற சிற்ப உருவங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சகாதேவ இரதம் எனப்படும் யானைக்கோயில் விமானத்தின் நெற்றி முகத்திலும், கணேச இரதம் எனப்படும் கோயில் விமானத்தின் நெற்றி முகத்திலும் உள்ளது போன்ற சேதிய அமைப்புப் போல இவை காணப்படுகின்றன.

“தர்மராஜ இரதம்”

“தர்மராஜ இரதம்” என்று கூறப்படுகிற இந்தப் பாறைக் கோயிலின் பழைய பெயர் “அத்யந்தகாம பல்லவேசுவரக்கிருகம்" என்பது. இது மூன்று நிலையுள்ள மாடக்கோயில். இதன் தரையமைப்பு, அகலமும் நீளமும் 28 அடியுள்ள சதுர அமைப்பாகும். உயரம் 39 அடி அதன் உச்சியில் இருக்கவேண்டிய கும்பகலசம் இக்கோயிலின் அருகே தரையில் இருக்கிறது. இக் கலசம் உச்சியில் இருக்குமானால் இக்கோயில் உயரம் ஏறக்குறைய 41 அடி இருக்கும்.

மேற்குப்புறம் பார்த்த இக் கோயிலின் முன்புறத்தில் சிங்கத் தூண்கள் உள்ளன. அர்த்த மண்டபமும் இருக்கிறது. இரண்டாவது நிலைக்குப் போகப் படிகள் இல்லை. ஆகவே மரப்படி அமைத்திருக் கிறார்கள். இரண்டாவது நிலையிலிருந்து மூன்றாவது நிலைக்குப் போகப் பாறையிலேயே கற்படிகள் உள்ளன. மூன்றாம் நிலைக்கு மேலே எட்டுப்பட்டையுள்ள விமானம் இருக்கிறது. அர்ச்சுன இரதம் என்னும் கோயிலிலும் இதுபோன்ற எட்டுப் பட்டையுள்ள விமானத்தைக் கண்டோம். ஆகவே இது திராவிட வகையைச் சேர்ந்த கட்டிடம் என்பது தெரிகிறது. இப்படிப்பட்ட விமானத்தையுடைய கோயிலுக்கு ஸ்கந்தகாந்தம் என்று காமிகாகமம் பெயர் கூறுகிறது.