உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

பலவகையான தொழில்களில் வளர்ச்சியடைந்து, தமது வாழ்க்கைக்கு வேண்டிய உணவு உடை உறையுள் கல்வி செல்வம் முதலியவற்றைப் பெற்று. நாகரிகமாக வாழ்கிற மனிதன் அவற்றினால் மட்டும் மன அமைதி அடைகிறதில்லை. நாகரிகமாக வாழும் மக்கள் உண்டு உடுத்து உறங்குவதனோடு மட்டும் திருப்தியடைவதில்லை. அவர்கள் மனம் வேறு இன்பத்தை அடைய விரும்புகிறது. அந்த இன்பத்தைத் தருவது எது? அழகுக் கலைகளே. நாகரிக மக்கள் நிறை திருப்தி- அடைவதற்குத் துணையாயிருப்பவை அழகுக் கலைகள்தான். அழகுக் கலைகள் மனிதனுடைய மனத்திற்கு அழகையும் இன்பத்தையும் அளிக்கின்றன. அழகுக் கலைகளின் வாயிலாக மனிதன் நிறை மனம் (திருப்தி) அடைகிறான்.

மனம்

அழகுக் கலைக்கு இன்கலை என்றும் கவின் கலை என்றும் நற்கலை என்றும் வேறு பெயர்கள் உண்டு.

மனிதனுடைய மனத்தில் உணர்ச்சியை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கிற பண்பு அழகுக் கலைகளுக்கு உண்டு. மனிதன் தன்னுடைய அறிவினாலும் மனோபாவத்தினாலும் கற்பனையினாலும் அழகுக் கலைகளை அமைத்து அவற்றின் மூலமாக உணர்ச்சியையும் அழகையும் இன்பத்தையும் காண்கிறான். அழகுக் கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிற படியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள்; பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்.

அழகுக் கலையை விரும்பாத மனிதனை அறிவு நிறம்பாத விலங்கு என்றே கூற வேண்டும். அவனை முழு நாகரிகம் பெற்றவன் என்று கூறமுடியாது.

அழகுக் கலைகள் எத்தனை? அழகுக் கலைகள் ஐந்து. அவை கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை, இசைக் கலை, காவியக் கலை என்பன. பண்டைக் காலத்தில் நமது நாட்டவர் கட்டிடக் கலையையும் சிற்பக்கலையையும்2 ஒரே பெயரால் சிற்பக் கலை என்று வழங்கினார்கள். ஆனால், கட்டிடக் கலை வேறு, சிற்பக் கலை வேறு.