உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை -ஓவியம் - அணிகலன்கள் - 39

நூல்களை வெளிப்படுத்தியும் பெருந்தொண்டு செய்தார்கள். இச் சமயத்தில் இன்னொருவகைக் கருத்தைத் கவனிப்போம்.

சமணரும் இசைக்கலையும்

இசைக் கலையை அழித்தவர் ஜைனராகிய சமணர் என்று ஒரு அபவாதம் கூறப்படுகிறது. சமண சமயத்தவர்மீது. அதன் பகைச் சமையத்தார் கற்பித்த பல அபவாதங்களில் இதுவும் ஒன்று. இது வீண் பழியாகும். உண்மையை யாராயும்போது, சமணர் இசைக் கலையை நன்கு போற்றி வளர்த்தனர் என்பது விளங்குகிறது. இதற்குச் சமண சமயத்தவர் நூல்களே சான்றாகும்.

திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்னும் காவியத்திலே இசைக் கலைச் செய்திகளும் ஆடல் பாடல் செய்தி களும் யாழ் என்னும் இசைக் கருவியின் செய்திகளும் பல விடங்களில் கூறப்படுகின்றன. அவற்றில் காந்தருவதத்தையார் இலம்பகம் என்பது சிறப்பானது. காந்தருவவதத்தை என்பவள் இசைக் கலையில் சிறந்தவள்.

19

காந்தருவதத்தை, தன்னை யார் இசையில் வெல்கிறானோ அவனையே திருமணம் செய்துகொள்வதாகக் கூறுகிறாள். அதன் பொருட்டு இசையரங்கு அமைக்கப்படுகிறது. பல அரச குமாரர்கள் வந்து இசை பாடித் தோற்றுப் போனார்கள். கடைசியாக சீவக குமாரன் வந்து இசை பாடி காந்தருவதத்தையை வென்று அவளை மணஞ் செய்து கொள்கிறான்.

ஆடவரின் காற்றும் படக்கூடாது என்று விரதம் பூண் சுரிமஞ்சரி என்னும் கன்னிகை, தனியே கன்னிமாடத்தில் இருந்த போது, சீவகன் தொண்டு கிழவன் போலக் கிழவேடம் பூண்டு கன்னி மாடத்தில் சென்று இசைப் பாடல் பாடுகிறான். அவ் விசைப் பாடலைக் கேட்ட சுரிமஞ்சரி, தனதுவிரதத்தை நீக்கிச் சீவகனை மணஞ்செய்து கொள்கிறாள். இச் செய்தியைச் சீவக சீந்தாமணி சுரிமஞ்சரியார் இலம்பகத்தில் காணலாம்.

இவ் இசைச் செய்திகளை ஜைன சமய காவியமான சீவக சிந்தாமணியில் ஜைன சமயத்தவரான திருத்தக்க தேவர் கூறுகிறார்.