உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகக் கலை வரலாறு : இசை

-

ஓவியம் - அணிகலன்கள் 113

என்பவர். இசைத் தமிழ் பதினாறு படலம் என்னும் நூலைச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் குறிப்பிடுகிறார். இந்த நூல் 16 படலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது; ஒவ்வொரு படலமும் பல ஓத்துகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

யாமளேந்திரர் என்பவர் இந்தி காளியம் என்னும் இசைநூலை எழுதினார். முறுவல், சயந்தம், செயிற்றியம் என்னும் பெயருள்ள இசை நூல்களும் இருந்தன. பரதம், அகத்தியம் என்னும் இசை நூல்களும் அக்காலத்து நூல்களே. பரதசேனாபதீயம் என்னும் நூலை இயற்றியவர் திவாயிலார் என்பவர். பாண்டியன் மதிவாணனார் என்பவர் மதிவாணனார் நாடகத் தமிழ் நூல் என்னும் பெயருள்ள நூலை இயற்றினார். இவை இசை, நாடகம் இரண்டையும் கூறுகிற நூல்கள். இத்தனை நூல்கள் அக்காலத்தில் இருந்தன என்றால், அக்காலத்தில் இசைக்கலை மிக உயர்ந்த நிலையில் இருந்த தென்பது தெரிகிறதல்லவா? இசைக்கலை உயர்ந்த நிலையில் இருந்ததற்குக் காரணம், அக்காலத்து அரசர்களும் பிரபுக்களும் கலைஞர்களை ஆதரித்துவந்ததுதான். சங்க காலத்துக்குப் பிறகு வேறு சில இசை நூல்கள் இயற்றப்பட்டன. அவற்றை இங்குக் கூறவில்லை.