உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓவியக்கலை*

நமது நாட்டு ஓவியக்கலையை ஆராய்வோம். ஓவியத்துக்குச் சித்திரம் என்றும் பெயர் உண்டு. நேர்கேடு, வளைந்த கோடு, கோணக் கோடு முதலிய கோடுகளினாலும் சிவப்பு கறுப்பு மஞ்சள் நீலம் முதலிய நிறங்களினாலும் ஓவியங்கள் எழுதப்படுகின்றன.

ஓவியக் கலையின் பழைமை

சங்க காலத்திலே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஓவியக்கலை நமது நாட்டில் வளர்ச்சியடைந்திருந்தது என்பதற்குச் சங்க நூல்களிலே சான்றுகள் உள்ளன. நமது நாட்டு ஓவியங்கள் பெரும்பாலும் சுவர் ஓவியங்களே. அதாவது சுவரிலே எழுதப்பட்ட ஓவியங்கள். சிறுபான்மை மரப்பலகைகளிலும் கிழி (துணிச்சீலை Canvas) களிலும் எழுதப்பட்டன. படம் என்று இப்போது வழங்குகிற தமிழ்ச் சொல், ஆதிகாலத்தில் துணியில் சித்திரம் எழுதப் பட்டதைத் தெரிவிக்கின்றது. படம் அல்லது படாம் என்பது, சித்திரம் எழுதப் பட்ட துணிச்சீலை என்னும் பொருள் உடையது.

சுவர் ஓவியம்

பண்டைக் காலத்தில் அரசருடைய அரண்மனை, பிரபுக்களின் மாளிகை, கோயில், மண்டபம் முதலிய கட்டிடங்களின் சுவர்களில் ஓவியங்களை எழுதி அழகுப் படுத்தினார்கள். சுவர் ஓவியங்கள் தான் பண்டைக் காலத்தில் பெரிதும் பயின்று வந்தன. ஒவ்வொரு அரசனுடைய அரண்மனையிலும் சித்திரமாடம் என்னும் கட்டிடம் தனியே அமைந்திருந்தது. பாண்டியன் நன்மாறன் என்பவன், தனது சித்திரமாடத்திலே தங்கியிருந்தபோது அங்கே உயிர் நீத்தான். அதனால் அவன் பாண்டியன் சித்திர மாடத்துச் துஞ்சிய நன்மாறன் என்று புறநானூற்றில் கூறப்படுகிறான்.

  • தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் (1956) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.