உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*சித்திரச் செய்தி

நுண் கலைகளில் மூன்றாவது ஓவியக்கலை என்று அறிந்தோம். ஓவியக்கலை சித்திரச் செய்தி என்றும் வட்டிகைச் செய்தி என்றும் கூறப்படும். செய்தி என்றால் சமாச்சாரம் என்பது பொருள் அன்று. செய்தித்தாள், செய்தி என்னும் சொற்களுக்கு இக்காலத்துப் பொருள் வேறு. செய்தி என்னும் சொல்லுக்குத் தொழில் அல்லது வேலை என்றும் பொருள் உண்டு. இறையனார் அகப்பொருள் உரையில் இதனைக் காணலாம். குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்னும் ஐந்து நிலங்களுக்கும் முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள்களைக் கூறுகிற இடத்தில் ஒவ்வொரு நிலத்துக்கும் தெய்வம், உணவு, மா, மரம்புள், பறை, செய்தி, யாழ் முதலியவற்றைக் கூறுகிறார். கூறு மிடத்துக் குறிஞ்சிக்குச் செய்தி தேனழித்தல்; முல்லையின் செய்தி வரகு களை கட்டலும் அவையறுத்தலும் கடாவிடுதலும் நிரை மேய்த்தலும் ஏறுகோடலும்; மருதநிலத்தின் செய்தி நெல்லரிதலும் அவை கடாவிடுதலும் பயிர்க்குக் களை கட்டலும்; நெய்தல் நிலத்தின் செய்தி மீன் விற்றலும் உப்பு விற்றலும்; பாலை நிலத்தின் செய்தி நிரை கோடலும் சாத் தெறிதலும் என்று கூறுகிறார். இங்குச் செய்தி என்று கூறப்படுவது தொழில் என்னும் பொருளில் உள்ளது காண்க. ஆகவே சித்திரச் செய்தி வட்டிகைச் செய்தி என்பதன் பொருள்

ஓவியத்தொழில் என்பது அறிக.

நுண் கலைகளில் நுட்பமானது (மென்மையானது) ஓவியக் கலை. னன்றால், நீண்டகாலம் நிலைத்திருக்கிற கட்டடக்கலை, சிற்பக் கலைகளைப் போலல்லாமல், சுவர்களில் எழுதப்படும் ஓவியக்கலை எளிதில் அழிந்து மறைந்துவிடுகிறது. ஆதிகாலத்தில் உலக முழுவதும் ஓவியத்தைச் சுவர்களிலே எழுதினார்கள். அதனால்தான் ‘சுவரை வைத்தல்லவோ சித்திரம் எழுதவேண்டும்' என்னும் பழமொழி உண்டாயிற்று. 'சுவரிலேல் சித்திரம் இல்லை' என்றும் கூறப்பட்டது.

  • நுண்கலைகள் (1967) நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரை.