உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 13.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 13

வாடிக் கிடக்கின்றன. சிறுமைப்பண்போடு செல்வமுள்ளவன் தன்னைச் சேர்ந்தவரின் துன்பத்தைப் போக்காமல் விடுவது போல அந்த வற்றல்மரம் தன்னையடைந்தவருக்கு நிழல் தராமல் இருக்கிறது. நல்லது செய்து புகழ் பெறாமல் எல்லோர்க்குந் தீமை செய்து ‘பாவி’ என்று பெயரெடுத்தவனைப்போல மரம் வேரோடு காய்ந்து கிடக்கிறது அம்மட்டோ? அரச ஊழியர் பொருளாசையினால் குடிமக்களை வருத்த அதனால் ஏற்பட்ட கொடுங்கோலாட்சியின் கீழ் உள்ள குடிமக்கள் வாழ வழியில்லாமல் மனம் வாடி வெதும்பி நிற்பதுபோல் பட்டுச் சாய்ந்து போன பாலை நிலத்து மரங்கள் புலவருக்கு காட்சியளிக்கின்றன.

பல கருத்துக்கள் பொதிந்த இந்த அழகான செய்யுளை இன்னொரு முறை படித்துப் பாருங்கள். இந்தக் கருத்துக்களை யெல்லாங் கவிஞன் தன்னுடைய கவிதையில் கூற முடியுமே யல்லாமல் ஓவியன் சித்திரமாக எழுதிக் காட்ட முடியுமா?

இவ்வாறு பல சொல்லோவியங்களைத் தமிழ்ச் செய்யுட்களி லிருந்து காட்டலாம். விரிவஞ்சி இதனோடு நிறுத்துகிறோம். அறிஞர்கள் இவைபோன்ற எண்ணற்ற செய்யுட்களைத் தமிழ் இலக்கியச் சோலையில் கண்டுகண்டு மகிழலாம்.

ஓவியக் கலைஞரும், காவியக் கவிஞரும் சில கருத்துக்களைத் தங்கள் தங்கள் ஓவியத்திலும், இலக்கியங்களிலும் பொதுவாகக் காட்ட முடியும். ஆனால், காவியக் கலைஞர் மட்டுஞ் சில கருத்துக்களைத் தங்கள் செய்யுள்களில் காட்டுவதுபோல் ஓவியக் கலைஞர் தங்கள் சித்திரங்களிலும் சிற்பங்களிலுங் காட்ட முடியாது. இதைத் தான் மேலே விளக்கிக் காட்டினோம்.

காவியக் கலைஞர் வேறு சில அழகுகளையும் தங்கள் செய்யுள்களில் அமைத்துப் படிப்பவருக்கு மகிழ்ச்சியையும், இன்பத்தையும் அளிக்கிறார்கள். பலவித ஓசை சந்தம் எதுகை மோனை முதலியவற்றை அழகாக அமைத்துச் செய்யுள் புனை கின்றார்கள். அவற்றை இன்னோர் இடத்தில் கூறுவோம்.