உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழக ஆவணங்கள் : சாசனச் செய்யுள்-செப்பேடுகள்-கல்வெட்டுகள்

201

12. இந்தக் குலத்திலே, நிலைபெற்ற புகழ் படைத்த கோசெங்க ணான் என்னும் அரசன் பிறந்தான். இவன், சிவபெருமானுடைய பாத தாமரையின் (தேனையுண்ணும்) வண்டு போன்றவன். இவன் குலத்திலே கோக்கிள்ளி என்னும் அரசன், நல்லறிவுள்ளவன் திருவின் செல்வன், மணிமுடி தரித்த மன்னர்களால் வணங்கப் பெற்ற பாதங்களை யுடையவன் - பிறந்தான்.

13. இந்தக் குலத்திலே, மிக்க ஆற்றல் வாய்ந்த வெற்றியுள்ள விஜயாலயன் தோன்றினான். இவன் நிலவுலகம் முழுவதையும் வென்றான். இவனுடைய தாமரை போன்ற பாதங்கள் இவனை வணங்கும் மன்னர்களின் முடியில் உள்ள மணிகளின் ஒளியினால் விளக்கம் அடைந்தன.

14. இந்த மலைபோன்ற அரசனிடமிருந்து சூரியன் போன்ற ஒளிமிக்க ஆதித்தியன் தோன்றினான். இவன் வெயில் போன்ற பேராற்றலினால் பகைவராகிய இருட் கூட்டத்தை அழித்தான்.

15. கணக்கற்ற மணிக்குவியல்களையும் ஏராளமான ஆற்றலையும் உடைய இவனிடமிருந்து பராந்தகன் என்னும் அரசன் பிறந்தான். இவன், கணக்கற்ற மணிகளையும் மீன்களையும் கொண்ட பாற் கடலிலே வெண்ணிலாத் தோன்றியது போல, முழுச் சிறப்புடன் உலகத்திற்கு நன்மை செய்யத் தோன்றினான்.

16. இவன் சக்கரவாளமலை வரையில் உள்ள உலகத்தை வென்று, கலி என்னும் இருட்டை ஓட்டி, எல்லா உலகத்தையும் அமைதி நிலவ அரசாண்டு அநேக நகரங்களை அமைத்து, வெண்மேகம் போன்ற தன் புகழைத் திசை எங்கும் பரப்பினன்.

17. சூரியகுலத்தின் கொடிபோன்ற இவன் (பராந்தகன்), தன்னுடைய ஆற்றலினாலே எல்லா இடர்களையும் வென்று அவ்விடங்களிலிருந்து கொண்டுவந்த தூய பொன்னினாலே புலியூரில் (சிதம்பரத்தில்) சிவ பெருமானுடைய விமானத்தை வேய்ந்தான்.

18. அரசர்கள் முடி தாழ்த்தி வணங்கப்பட்ட அடிகளையுடைய இந்த அரசனுக்கு, இந்திரன் போன்ற செல்வமும் முத்தீ போன்ற ஒளியும் படைத்த மூன்று மக்கள் தோன்றினர். அவர்கள், ராஜாதித் தியனும் பேர்போன கண்டராதித்தியனும் ஆற்றல் வாய்ந்த அரிஞ்சயனும் ஆவர். இவர்களின் பெயர் மூவுலகத்திலும் புகழ் பெற்றவை.