உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

கொண்டு, வீரம் கொடை தியாகம் என்னும் தூயகுணங்கள் ஒன்றையொன்று சேர்ந்திருக்க விரும்பி நெடுநாள் தேடிக் கடைசியில் ஒன்று சேர்ந்ததுபோல, இம்முக்குணங்களும் தன்னிடம் ஒருங்கே யமையப்பெற்று, தாமரைக் கண்ணனைப் போல (திருமாலைப் போல) விளக்கினான்.

வீரர்களுக்குத் தலைவனாய் உலகத்தை யாளும் ஆற்றல் படைத்த இந்தப் பல்லவ மகாராஜனுக்கு, முப்புரங்களை வென்ற வீரனுக்கு (சிவபெருமானுக்கு) கௌரி மனைவியாக வாய்ந்தது போல, கடம்பகுல சூளாமணியான புகழ் வாய்ந்த அரசனுடைய மகளான அக்கள நிம்மதி என்பவள் மனைவியாக வாய்த்தாள்.

ஒனியை (சூரியனை) வைகறைப் பொழுது போலவும், வியக்கத் தக்க சத்தியை (வேலை) யுடைய குமரனை அம்பிகை தந்தது போலவும், வெற்றி மிக்க சயந்தனைச் சசி தந்ததுபோலவும், புகழ் பெற்ற நந்திவர்மனை (iii) இவள் (அக்கள நிம்மதி) தந்தாள்.

இவன் (நந்திவர்மன் iii) தன் தோள் வலியினாலும், ஆற்றலி னாலும், தன் வாளியினாலும் கொன்ற யானைகளின் மருப்புகளிலிருந்து வெளிப்பட்ட முத்துக்கள் நகைப்பது போலக் காணப்பட்ட போர்க் களத்திலே, தன் பகைவர்களைக் கொன்று, மற்றவர்களால் கைப்பற்ற முடியாத அரசாட்சியைக் கைப்பற்றினான்.

"

இந்த அரசனால் இந்த உலகம் சிறப்படைந்து விளக்கியதுபோல அவ்வளவு சிறப்பை, பூஞ்சோலைகள் இளவேனிலினாலும், உயர்குடிப் பிறந்தவர் நல்லொழுக்கத்தினாலும், மங்கையர் கற்பினாலும், செல்வந்தர் கொடையினாலும், கற்றறிந்தவர் அடக்கத்தினாலும், தாமரைகள் சூரியனாலும், கார்காலத்திற்குப் பின்னர் விளங்கும் அகன்ற வானம் சந்திரனாலும் அடையவில்லை.

கல்வியினாலும் அடக்கத்தினாலும் நிலைபெற்ற நற்குணங் களினாலும் விளங்கும் பப்ப பட்டராகன் என்னும் சிறப்புப் பெயரை யுடைய யஜ்ஞபட்டன் என்பவன், வேத சாஸ்திர சாங்கியங்களைக் கற்றதினாலும், சிவபெருமானிடத்து இடையறாத பக்தியினாலும் பேர்போனவன். உயரமான கயிலயா மலைபோல ஒரு கோயிலைச் சிவபெருமானுக்கு ஸ்ரீகாட்டுப்பள்ளி என்னும் ஊரில் கட்டினான்.