உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

ஆராயாமலேயே விட்டுவிட்டார்கள். நாம் மேலே கூறியபடி, பாம்புகளோடு (நாகருடன்) வளர்ந்தான் என்பதற்கு பல்லவ அரசருடன் வளர்ந்தான் என்பது கருத்து. பூதிவிக்ரம கேசரி கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் இருந்தான் என்றால் அவனுடைய இரண்டாம் பாட்டனான விக்ரமகேசரி கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாதல் வேண்டும். 9-ஆம் நூற்றாண்டில் பல்லவ அரசர் ஆதிக்கம் ஆட்டம் கண்டு விட்டது. வீழ்ச்சியடையும் நிலையில் இருந்த பல்லவருடன் கொடும்பாளூர் விக்ரம கேசரி தொடர்பு கொண்டிருந்தான் என்பது பொருந்தாது. பல்லவர் சிறப்புற்றிருந்த காலத்தில் விக்ரம கேசரி, பல்லவருடன் தொடர்பு கொண்டு அவர்களோடு வளர்க்கப்பட்டான் என்பதே பொருத்தமாகும். பல்லவர் சிறப்பு உச்சநிலையில் இருந்தது கி.பி. 7-ஆம் நூற்றாண்டில். ஆகவே, விக்ரம கேசரி கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இருந்தவனாதல் வேண்டும்.

இரண்டாவதாகக் கருதவேண்டியது: பூதிவிக்ரமகேசரியின் பாட்டனான பரதுர்க்கமர்த்தனன், வாதாபிஜித் (வாதாபியை வென்றவன்) என்று சாசனம் கூறுகிறது. சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசி யினுடைய தலைநகரமான வாதாபி நகரத்தை வென்றான் நரசிம்ம வர்மன். இவன் இந்நகரத்தை கி.பி. 642-இல் வென்றான். இதனால் இவனுக்கு வாதாபி கொண்ட நரசிம்மவர்மன் என்று சிறப்புப் பெயர் ஏற்பட்டது. இவனுடைய சேனை தலைவனாக இருந்தவர் பரஞ்சோதி எனப்படும். சிறுத்தொண்டை நாயனார். இந்தப் போரில், பரதுர்க்க மர்த்தனனும் கலந்துக் கொண்டு வாதாபி நகரத்தை வென்றதில் பெரும் பங்கு எடுத்திருக்கக் கூடும். ஆகையால் இவனுக்கு வாதாபிஜித் என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். வாதாபிப் போரில், நரசிம்மவர்மன் நேரில் கலந்துக் கொள்ளவில்லை. தன் சேனைத் தலைவனாகிய பரஞ்சோதியாரை அனுப்பினான். பல்லவ அரசரின் நண்பர்களாக இருந்த கொடும்பாளூர்ச் சிற்றரசனான நிருபகேசரியும், வாதாபிப் போரில் கலந்து கொண்டிருக்க வேண்டும். பரதுர்க்க மர்த்தனனின் தந்தையான நிருபகேசரி, பல்லவருக்கு நெருங்கிய நண்பனாய் நாக குலத்தவராகிய பல்லவரோடு வளர்ந்தான் என்று மேலே கூறினோம். எனவே, தந்தையாகிய நிருபகேசரி பல்லவ அரசருக்கு நெருங்கிய நண்பனாக இருந்ததுபோலவே மகனான பரதுர்க்கமர்த்தனும் பல்லவ அரசருக்கு நண்பனாக இருந்து நரசிம்மவர்மன் நிகழ்த்திய வாதாபிப் போரில் கலந்து கொண்டு அதனை வென்று வாதாபிஜித் என்னும் சிறப்புப் பெயரையடைந்தான் என்று கருதுவது உண்மைக்கும் யுக்திக்கும் பொருந்துகிறது.