உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு

கிறித்துவமும் தமிழும்

73

16-ஆம் நூற்றாண்டு முதல் நமது நாட்டில் வாணிகம் செய்துவந்த போர்ச்சுகீசியர், ஒல்லாந்தர், பிரெஞ்சுக்காரர் முதலிய ஐரோப்பிய இனத்தாரின் மொழிச் சொற்களும் தமிழிற் கலந்திருக்கவேண்டு மல்லவா? இதைப்பற்றி ஆராயுமிடத்துப் போர்ச்சுகீசிய ராகிய பறங்கியர் மொழிச் சொற்கள் தவிர, ஏனைய ஒல்லாந்து மொழிச் சொற்களும் பிரெஞ்சுமொழிச் சொற்களும் தமிழிற் கலந்து வழங்கியதாகத் தெரியவில்லை. பிரெஞ்சு, ஒல்லாந்து, டேனிஷ் மொழிச் சொற்கள்மட்டும் தமிழிற் கலக்காமல், போர்ச்சுகீசு மொழிச் சொற்கள் மட்டும் தமிழிற் கலந்தது புதுமையாகத் தோன்றலாம். 16,17,18- ஆம் நூற்றாண்டுகளில் நமது தமிழ் நாட்டில் நான்கு ஐரோப்பிய இனத்தார் வந்திருந்து வாணிகம் செய்திருக்க, அந்நான்கு மொழிச் சொற்களும் தமிழில் திசைச் சொற்களாகக் கலக்காமல், போர்ச்சுகீசு மொழிச் சொற்கள் மட்டும் கலக்கவேண்டிய காரணம் என்ன? காரணம் இதுவாகும்: முதன்முதலில் நமது நாட்டிற்கு வந்த ஐரோப்பிய இனத்தார் போர்ச்சுகீசியராவர். அவர்களுக்குப் பிறகுதான் மற்ற ஐரோப்பியச் சாதியார் இங்கு வந்தனர். முதலில் வந்த போர்ச்சுகீசுச் சாதியார் நமது நாட்டினிற் சிலரைக் கிறித்தவராக்கி, அவர்களுக்குப் போர்ச்சுகீசு மொழியைக் கற்பித்தனர். அன்றியும், இவர்கள் தங்கள் கோட்டை களைக் காப்பதற்காக அழைத்துவந்த சிப்பாய்களுக்கு இந்தியப் பெண் களைக் கலியாணம் செய்துவைத்தனர். இந்தக் கலப்பு மணத்தினாற் பிறந்த பிள்ளைகள் ‘துப்பாசிகள்' என்னும் பெயருள்ள ஒரு தனி இனத்தாராக இருந்தனர். இந்தத் துப்பாசிகள் போர்ச்சுகீசு மொழியைத் தங்கள் தாய்மொழியாகப் பேசிவந்தனர். (இப்பொழுது இந்தியர் களுக்கும் ஆங்கிலேயருக்கும் பிறந்த பிள்ளைகள் ‘ஆங்கிலோ இந்தியர்’ என்னும் பெயர்பெற்று, ஆங்கிலமொழியைத் தாய்மொழி யாகக் கொண்டிருப்பதுபோல, போர்ச்சுகீசியருக்கும் இந்தியருக்கும் பிறந்த துப்பாசி என்னும் வகுப்பார் போர்ச்சுகீசு மொழியைத் தாய்மொழியாகப் பேசிவந்தனர்.) போர்ச்சுகீசியருக்குப் பிறகு நமது நாட்டிற்கு வந்த மற்ற ஐரோப்பியரும் போர்ச்சுகீசு மொழியையே அக்காலத்தில் இந்தியாவில் பொதுமொழியாகப் பேசிவந்தார்கள். ஐரோப்பிய வர்த்தகர் எல்லோரும் போர்ச்சுகீசு மொழியைப் பொதுமொழியாக வழங்கிவந்ததுபற்றி, வாணிகத்தின் பொருட்டும் பிற காரணத்தின்பொருட்டும் அவர்களுடன் பழகிய தமிழரும் அம்மொழியை அக்காலத்திற் கற்கவேண்டியது கட்டாயமாயிற்று.