உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தமிழில் வழங்கும் ஐரோப்பியத்

திசைச் சொற்கள்

வழக்காற்றிலுள்ள எல்லா மொழிகளிலும் அயல் நாட்டுத் திசைச் சொற்கள் கலந்துவிடுவது இயற்கை. இஃது எக்காலத்திலும் எல்லா நாட்டிலும் எல்லா மொழிகளிலும் ஏற்பட்டுவருகிறது. கி.மு.1015-ஆம் ஆண்டில் இருந்த சாலமன் என்னும் அரசன் காலத்திலும், அவனுக்கு முற்பட்ட காலத்திலும், துணி, தந்தம், குரங்கு, இஞ்சி, மிளகு, அரிசி, மயில், சந்தனக்கட்டை முதலிய பொருள்களின் பெயர்கள் தமிழ்ப் பெயராகவே எபிரேய' மொழியில் வழங்கி வந்ததை "பைபிள் என்னும் விவிலிய நூலிற் காணலாம். அவ்விதமே, அரிசி, இஞ்சிவேர் போன்ற தமிழ்ச்சொற்கள் கிரீக்கு, இலத்தீன் என்னும் மொழிகளிற் சிதைந்து வழங்கி வந்ததையும் காண்கிறோம். பன்னூற்றாண்டுகளுக்கு முன்னே இந்தியாவுக்கு வந்த ஆரியர் பேசிய ஆரியமொழியிலும் திராவிட மொழிச் சொற்கள் பல கலந்திருக்கின்றன என்று ஆராய்ச்சி வல்ல அறிவாளர்கள் சொல்லுகிறார்கள். ஆங்கில மொழியிலும் கறி, கட்டுமரம், மிளகுத்தண்ணீர், கூலி, வெற்றிலை முதலிய தமிழ்ச் சொற்கள் சிதைந்து வழங்கி வருகின்றன.

இவ்வாறே ஐரோப்பியத் திசைச் சொற்கள் சில தமிழில் வழங்கி வருகின்றன. இப்போது ஆங்கிலம் அரசாங்க மொழியாக இருப்பது பற்றியும், ஆங்கிலம் கற்றவர்க்கே அலுவல் கிடைக்கின்றமை பற்றியும், வணிகத் துறையிலும் ஆங்கிலமொழி வேண்டப்படுகிறது பற்றியும் நாம் ஆங்கிலம் கற்றுவருகிறோம். இவ்விதம் ஆங்கிலத் தொடர் புடைமைபற்றிச் சில ஆங்கிலச் சொற்கள் தமிழில், முதன்மையாகப் பேச்சுவழக்கிற் பயின்றுவருகின்றன. அவற்றுட் சிலவற்றைக் கீழே தருகிறோம்: கவர்னர், கோர்ட்டு, ஆபீஸ், காப்பி, ரைட்டர், பட்லர், ஜட்ஜ், பேப்பர், பினல்கோடு, சம்மன், சாப்பு, மோட்டார், ஷர்ட்டு, கோட்டு, கம்பெனி, சர்ச்சு, மிசன், ரோட்டு, கமிட்டி, மீட்டிங்கு, டிராம்கார், சோப்பு முதலியன. இது நிற்க.