உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 17.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழறிந்த ஐரோப்பியர்

1. தத்துவ போதக சுவாமி (1577-1656)

(Robert De Nobili)

தத்துவ போதக சுவாமி இத்தாலி தேசத்தைச் சேர்ந்த தஸ்கனி மாகாணத்தின் ஓர் உயர்ந்த பிரபுக் குடும்பத்திற் பிறந்தவர். நேப்பில்ஸ் நகரத்திலிருந்த ஏசுவின் சபையிற் சமயக்கல்வி பயின்று, பின்னர் 1606-ல் தமிழ்நாட்டிற்கு வந்தார். இவர் தமிழ் நாட்டிற்கு வந்த நோக்கம் யாதென்றால், தமிழ்நாட்டு "உயர்குல" இந்துக்களைக் கிறித்துவ மதத்தில் திருப்பவேண்டும் என்பதே. அதன்பொருட்டு, மானைக்காட்டி மானைப் பிடிப்பதுபோல, இவர் தமது நடையுடை பாவனைகளை முழுவதும் மாற்றிக்கொண்டு, இந்துத் துறவிக்கோலந் தரித்து வாழ்ந்துவந்தார். புலாலுணவை நீக்கி, “சைவ” உணவை ஒரேவேளை உண்டு வந்தார். நெற்றியிற் சந்தனம் அணிவார். மார்பிற் பூணூல் தரித்துக்கொள்வார். ஐந்து புரியாக அமைக்கப்பட்டிருந்த அப் பூணூலில் மூன்று புரிகள் பொன்னாலானவை; மற்ற இரண்டு புரிகளும் வெள்ளியாலானவை. மூன்று பொற் புரிகளும் கிறித்துவர்களின் மும்மூர்த்திகளைக் குறிப்பன என்றும், இரண்டு வெள்ளிப் புரிகளும் இயேசு கிறிஸ்துவின் உடலையும் உயிரையும் குறிப்பன என்றும் இவர் தத்துவார்த்தம் சொன்னார். அப்பூணூலில் சிலுவையொன்று கட்டித் தொங்கவிட்டிருந்தார். ராபர்ட்-டி-நொபிலி என்னும் தமது பெயரை மாற்றி, “தத்துவ போதகர்” என்று வைத்துக்கொண்டார். மதுரை யிலிருந்த பார்ப்பனர், இவர் தாம் பிராமணர் என்று சொல்லியதில் நம்பிக்கை கொள்ளாத போது, பழைமையான ஓலையில் சமஸ்கிருத மொழியில் தாமே ஒரு சாசனம் எழுதிக்கொண்டு, உரோமாபுரியிலுள்ள ஏசுவின் சபைக் குருக்கள்மார் இந்துதேசத்துப் பிராமணர்களைப் பார்க்கிலும் பூர்வீகப் பிராமணர்கள் என்று காண்பித்து, அவர்களை நம்பச்செய்தார்.