உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பதிப்பின் முன்னுரை

வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நேரிடுகின்றன. அந் நிகழ்ச்சிகளின் பயனாகச் சில சமயங்களில் எதிர்பாராத செயல்கள் விளைகின்றன. எனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு நிகழ்ச்சியின் விளைவுதான் இந்த மறைந்துபோன தமிழ்நூல்கள் என்னும் புத்தகம்.

அந்நிகழ்ச்சி இது: எனக்கு மக்கட்பேறு கிடையாது. ஆனால், எனது நெருங்கிய உறவினரின் குழந்தைகள் இருவர் என் வீட்டில் வளர்ந்தனர். அன்பழகன் என்னும் பெயருள்ள மூன்று வயதுச் சிறுவனும், தங்கமணி என்னும் பெயருள்ள ஒன்றரை வயதுச் சிறுமியும் அக் குழந்தைகளாவர். அக்குழந்தைகள், வீட்டுக்கு இரண்டு விளக்குகளாத் திகழ்ந்தனர். குடும்பச் செல்வங்களாக விளங்கினார்கள். காட்சிக்கினிய கண்மணிகளாக வளர்ந்தார்கள். ஆனால், அந்தோ! எதிர்பாராத விதமாக அக்குழந்தைகள் மறைந்தன! மக்கட்செல்வங்கள் மறைந்தன: ஒளி விளக்குகள் அணைந்தன: சின்னஞ்சிறிய அரும்புகள், மலர்ந்து மணம் கமழ்வதற்கு முன்னே பறிக்கப்பட்டன. அது காரணமாக எனது மனத்தில் துன்பம் சூழ்ந்தது; மனவேதனை பெருகிற்று. நிலையாமையைப்பற்றி நாலடியாரில் படித்த ஆணித்தரமான செய்யுள்கள் கூட என் மனத் துன்பத்தை அகற்றத் துணைபுரியவில்லை. காலம் என்னும் நூலினால் நெய்யப்பட்ட மறதி என்னும் திரை மூடினால்தான் மனத்துன்பம் மறையும். ஆனால், அந்தத் திரை விரைவில் மூடி மறைப்பதாக இல்லை. அது வரையில் என்ன செய்வது? துன்பத்தை அகற்ற முயன்றேன், முடியவில்லை.

ஏதேனும் நூலைப் படித்துக்கொண்டேயிருந்தால் அது மனத்துயரத்தைத் தீர்க்கும் மருந்தாக இருக்கும் என்று கருதி, எதிரிலிருந்த ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். அது யாப்பருங் கல விருத்தி என்னும் நூல். அதனைப் படிக்கத் தொடங்கினேன். அந் நூலின் பழைய உரையாசிரியர், தமது உரையில் பல நூல்களிலிருந்து சில செய்யுள்களை உதாரணம் காட்டியிருந்தார். மேற்கோள் காட்டப் பட்ட நூல்களில் சில இறந்து மறைந்துபோன நூல்களாக இருந்தன. என் குடும்பத்தில் இரண்டு அருமைக் குழந்தைகள் மறைந்துவிட்டதுபோல, தமிழிலக்கியக் குடும்பத்திலும் சில குழந்தைகள் மறைந்துபோனதை அப்போது கண்டேன். என் மனத்தில் அப்போது புதியதோர் எண்ணம் தோன்றிற்று. தமிழன்னை எத்தனை குழந்தைகளை - தமிழ் நூல்களை

6