உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்நிலை

சூழ்நிலைக்கும் சுற்றுச் சார்புக்கும் தக்கவாறு மனிதரின் பண்பாடும் நாகரிகமும் அமைவதுபோலவே. இலக்கியங்களும் அந்தந்தச் சூழ்நிலை சுற்றுச் சார்புக்குத் தக்கவாறு அமைகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியம் அந்த நூற்றாண்டின் சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ந்திருக்கிறது. அரசியல் சூழ்நிலை, வாழ்க் கைச் சூழ்நிலை, சமயங்களின் சூழ்நிலை, மேல்நாட்டுத் தொடர்பு முதலியவற்றினாலே பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கியம் பெரிதும் வளர்ச்சி யடைந்திருக்கிறது. அந்தச் சூழ்நிலைகளைச் சுருக்கமாகவேனும் அறிந்தால் தான் அந்த நூற்றாண்டின் இலக்கிய வளர்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும். ஆகவே, அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம்.

·

அரசியல் சூழ்நிலை: பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டின் அரசியல், அதற்கு முன்பு மூன்று நூற்றாண்டுகளில் இருந்த அரசியல் நிலையைவிட நன்கு அமைந்திருந்தது. கி.பி. 16, 17, 18-ஆம் நூற்றாண்டுகளிலே தமிழ்நாட்டின் அரசியல் – ஏன்? இந்தியநாட்டின் அரசியலுங்கூட, சண்டை சச்சரவும் போரும் குழப்பமுமாக இருந்தன. அதனால் மக்கள் அல்லல் பட்டனர். சேர சோழ பாண்டியர் பல்லவர் முதலிய பழைய அரசர்கள் மறைந்துபோய், சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் நாட்டைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அரசாண்டனர். இவர்களுக்குப் பாளையக்காரர் என்பது பெயர். இந்த நிலையில் வி ஜயநகர அரசர்களும், பின்னர் முகம்மதியரும் மராட்டியரும் தமிழ்நாட்டைக் கைப்பற்றி அரசாண்டனர். ஆனால் நாட்டில் அமைதி ஏற்படவில்லை. போரும் சண்டையும் குழப்பமும் கூச்சலும் அதிகப்பட்டன. மேலும், போர்ச்சுகீசியர் (பரங்கியர்), ஒல்லாந்தர் (டச்சுக்காரர்), பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகிய மேல்நாட்டு ஐரோப்பியர் "கும்பினி” என்னும் வாணிகக்குழுவை அமைத்துக் கொண்டு நமது நாட்டுக்கு வந்து ஆங்காங்கே கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாணிகம் செய்யத் தொடங்கினார்கள்.