உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 16

மதசம்பந்தமான நூல்களைத் தமிழில் வெளியிட்டார்கள். இவர்கள் செயலைக் கண்ட இந்துக்களாகிய சைவ வைணவர்கள் விழித்துக் கொண்டு தாங்களும் தங்கள் மதசம்பந்தமான நூல்களைத் தமிழில் எழுதி வெளியிட்டார்கள். முக்கியமாக வசன நூல்களே எவளிவந்தன. எனவே, சமயச் சார்பாகச் சென்ற பத்தொன்பதாம் நூற்றண்டிலே பல புதிய இலக்கிய நூல்கள், முக்கியமாக வசன இலக்கியங்கள் தோன்றி வளர்ந்தன. இதற்கு முந்திய நூற்றாண்டுகளில் தமிழில் வசன நூல்கள் பெரும்பாலும் இல்லை என்றே கூறலாம்.

66

அச்சியந்திரம்: பத்தொன்பதாம் நூற்றாண்டிலே தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பேருதவியாக இருந்தவை அச்சியந்திரங்களாகும். கி.பி. பதினாறாம் நூற்றண்டிலேயே அச்சியந்திரங்கள் நமது நாட்டுக்கு வந்துவிட்டன என்பது உண்மையே, ஆனால், அவையெல்லாம் கிறிஸ்துவப் பாதிரிமாரிடத்திலும் ஐரோப்பிய வணிகக் “கும்பினி” யாரிடத்திலும் இருந்தன. அவர்கள் சில சிறிஸ்துவ நூல்களைமட்டும் தமிழில் அச்சிட்டார்களே தவிர, தமிழ் இலக்கிய நூல்களை அச்சிடவில்லை. அக்காலத்தில் சுதேசிகள் அச்சியந்திரம் அமைக்க வாய்ப்பில்லாமல் இருந்தார்கள். கி.பி. 19-ஆம் நூற்றண்டிலேதான் நமது நாட்டவர் அச்சியந்திரம் அமைக்கும் உரிமை பெற்றனர். கி.பி. 1835- க்குப் பிறகுதான் நம்மவர் அச்சியந்திரங்களை அமைந்து எழுதா எழுத்தினால்” அச்சுப் புத்தகங்களை அச்சிடத் தொடங்கினார்கள். இந் நூற்றாண்டில்தான் நெடுங்காலமாக ஏட்டுச்சுவடியாகக் கிடந்த பழைய தமிழ் நூல்களும் புதிய தமிழ் நூல்களும் அச்சிடப்பட்டு வெளி வரலாயின. அச்சுப் புத்தகம் வெளிப்பட்டு ஏழை எளியவரும் சொற்பச் செலவில் புத்தகம் வாங்கிப் படிக்க வாய்ப்பு ஏற்பட்டபடியால், மக்களிடத்தில் கல்வி பரவுவதற்கு வாய்ப்பு உண்டாயிற்று. இந்த நூற்றண்டுக்கு முன்பு இவ்வித நல்ல வாய்ப்பு பொது மக்களுக்கு ஏற்படவில்லை. அக்காலத்தில் அதிகப் பொருள் செலவு செய்து பல நாட்களாக உழைத்து எழுதி ஓர் எட்டுச் சுவடியைப் பெறவேண்டும். அப்படிப் பெறப் பொருள் வசதியுள்ளவர்களுக்குத் தான் முடியும். அச்சியந்திரம் வந்தபிறகு சொற்ப காலத்தில் சொற்ப விலையில் ஆயிரக்கணக்கான அழகுள்ள அச்சுப் புத்தகங்களை யுண்டாக்க முடிந்தபோது, ஏழை எளியவரும் புத்தகம் வாங்கிப் படிக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலை மக்கள் கல்வி கற்பதற்குப் பேருதவியாக இருந்தது. இதனால், தமிழ் இலக்கியம் வளம் பெறுவதாயிற்று.