உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசைத்தமிழ் நூல்கள்

1. இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை

இப்பெயருள்ள ஒரு நூல் இருந்தது என்பது, குணசாகரரின் யாப்பருங்கலக் காரிகை உரைப் பாயிரத்தினால் தெரிகிறது. என்னை?

“அற்றேல் இந்நூல் என்ன பெயர்த்தோ எனின், --- இசைத் தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவையே போலவும், அருமறை யகத்து அட்டக ஓத்தின் வருக்கக் கோவையே போலவும், உரூபாவதாரத்திற்கு நீதகச் சுலோகமே போலவும் முதல்நினைப்பு உணர்த்திய இலக்கியத்த தாய்ச் ---- செய்யப்பட்டமையான் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து.”

என்று அவர் கூறுவது காண்க.

இதனால், இசைத்தமிழ்ச் செய்யுட்டுறைக் கோவை என்னும் நூல், இசைத் தமிழ்ச் செய்யுளிலக்கணத்தைக் கூறுகிறது என்பதும், இந்நூலில் பாட்டுகளின் முதல் நினைப்பை உணர்த்தும் செய்யுள்களும் இருந்தன என்பதும் தெரிகின்றன. இந்நூலைப் பற்றிய வேறு செய்திகள் தெரிய வில்லை.

2. இசைநுணுக்கம்

இந்நூலை இயற்றியவர் சிகண்டி என்னும் முனிவர். அநாகுலன் என்னும் பாண்டியனுக்கும் திலோத்தமை என்னும் தெய்வ மகளுக்கும் பிறந்த சாரகுமாரன் என்பவன் இசைநூல் அறிவதற்காக இவரால் இந்நூல் இயற்றப்பட்டது. இதனைச், சிலப்பதிகாரம், உரைப்பாயிரத்தில், அடியார்க்கு நல்லார் கூறுவதிலிருந்து அறியலாம்:

66

இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி என்னும் அருந்தவ முனி, இடைச்சங்கத்து அநாகுலன் என்னும் தெய்வப் பாண்டியன் தேரேறி விசும்பு செல்வோன் திலோத்தமை என்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடினவிடத்துச் சனித்தானைத் தேவரும் முனிவரும் சரியா நிற்கத் தோன்றினமையிற் சாரகுமாரனென அப்பெயர் பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசைநுணுக்கம்”