உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண நூல்கள்

1. அகத்தியம்

அகத்தியர் என்பவர் செய்தது அகத்தியம் என்னும் இலக்கண நூல். அகத்தியர் என்னும் பெயருள்ளவர் பலர் இருந்திருக்கிறார்கள். சிவவெருமானிடத்தில் தமிழ் கற்றுத் தலைச்சங்கத்தில் புலவராகத் திகழ்ந்த அகத்தியர் ஒருவர் உளர். பௌத்தக் கடவுளாகிய அவ லோகிதர் என்னும் போதிசத்துவரிடத்தில் தமிழ் கற்ற ஓர் அகத்தியர் உளர். இவர் பௌத்தர்களால் போற்றப்படுகிறவர். இராமாயணத்தில் கூறப்படுகிற அகத்தியர் ஒருவர் உளர். பாரதத்தில் கூறப்படுகிற கண்ண பிரான் காலத்தில் இருந்த ஓர்' அகத்தியர் உளர். இந்த அகத்தியர், கண்ணபிரானிடம் சென்று அவர் அனுமதி பெற்று, துவாரகையி லிருந்து யதுகுலத்தைச் சேர்ந்த பதினெண்குடி வேளிரையும் அருவா ளரையும் அழைத்துவந்து, அவர்களைத் தமிழ் நாட்டிலே குடியேற்றி யவர் என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். இந்த அகத்தியர் ஜைனரால் போற்றப்படுகிறவர். இன்னும் ஜாவா, சுமாத்திரா முதலிய தீவுகளுக்குச் சென்று, அங்குச் சைவ சமயத்தைப் போதித்த சிவகுரு என்னும் அகத்தி யரும் ஒருவர் உளர். இவ்வாறு அகத்தியர் என்னும் பெயருள்ளவர் பலர் இருந்திருக்கிறார்கள். இவர்களில் எந்த அகத்தியர் அகத்தியம் என்னும் நூலை இயற்றினார் என்பது தெரியவில்லை. வெவ்வேறு காலத்தி லிருந்த இந்த அகத்தியர்களில் சிலர் தத்தம் பெயரால் அகத்தியம் என்னும் சில நூல்களை இயற்றியிருத்தலும் கூடும். சிற்றகத்தியம், பேரகத் தியம் என்னும் நூல்கள் இருந்தன என்று கூறப்படுகின்றன. காக்கை பாடினியார் என்னும் பெயருள்ளவர் இருவர் தத்தம் பெயரால் இயற்றிய 'காக்கைபாடினியம்' என்னும் நூல்களுக்குப் பெருங் காக்கைப் பாடினி யம், சிறுகாக்கைப்பாடினியம் என்று பெயர்கள் வழங்கப்படுவதுபோல, வெவ்வேறு காலத்திலிருந்த அகத்தியர்கள் தத்தம் பெயரால் இயற்றிய அகத்தியம் என்னும் நூல்களுக்குச் சிற்றகத்தியம், பேரகத்தியம் என்று பெயர் வழங்கினார்கள் போலும்.