உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர்களும் நூல்களும்

19-ஆம் நூற்றாண்டில் இருந்த புலவர்களைப்பற்றியும் அவர்கள் இயற்றிய நூல்களைப் பற்றியும் கூறுகிறேன். நான் அறிந்தவரையில் எல்லாப் புலவர்களைப் பற்றியும் இதில் கூறியுள்ளேன். விடுபட்ட புலவர்களும் இருக்கக்கூடும். என் ஆராய்ச்சிக்குக் கிடைத்த புலவர்களைப் பற்றி மட்டும் இங்கு எழுதுகிறேன். சுருக்கமான வரலாறுகள் இவை.

முத்தப்ப செட்டியார் (1760-1836)

கீழைச்சிவல்பட்டியில் பிறந்தவர். வெண்பாப்புலி வீரகவிராயர், மிதிலைப்பட்டி. வேலுகவிராயர் என்னும் புலவர்கள் இவர் காலத்திருந்தனர். இவர் இயற்றிய நூல்கள் : திருமுகவிலாசம், செயங்கொண்டார் சதகம், செட்டிமார் வரலாறு, செயங்கொண்ட சோழீசர்பிள்ளைத் தமிழ் மேற்படி பதிற்றுப்பத்தந்தாதி, மேற்படி கலித் துறையந்தாதி, நேமக்கலம்பகம், செயங்கொண்ட சோழீசர் ஊசற்றிருநாமம்.

முத்துசாமி பிள்ளை (?-1840)

இவர் ஊர் புதுச்சேரி. கிறிஸ்துவர். தமிழ், ஆங்கிலம், இலத்தீன் தெலுங்கு வடமொழி என்னும் மொழிகளைக் கற்றவர். சென்னைக் கல்விச் சங்கத்தின் ஆட்சிப் பொறுப்பாளராக இருந்தவர். வால்டர் எல்லிஸ் துரையின் விருப்பப்படி அச்சங்கத்துக்காக ஏட்டுச் சுவடி களைச் சேகரித்து வருவதற்காக 1816-ஆம் ஆண்டு தென்னாட்டில் சுற்றுப்பிரயாணம் செய்தார். முக்கியமாக வீரமா முனிவர் இயற்றிய நூல்களைச் சேகரித்தார். வீரமா முனிவரின் சரித்திரத்தைத் தமிழில் எழுதி 1822-ஆம் ஆண்டு வெளியிட்டார். அதையே ஆங்கிலத்தில் எழுதி 1840-ஆம் ஆண்டில் வெளியிட்டார். சென்னைக் கல்விச் சங்கத்தின் முக்கிய அங்கத்தினரான ரிச்சார்டு கிளர்க்கு துரையுடன் சேர்ந்து சில தமிழ்ப் புத்தகங்களை எழுதினார்.