உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -15

"தொல்காப்பியனார், நக்கீரனார் முதலாகவுள்ளார் ஒரு சாராசிரியர் ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீரடியும் அருகிவரப் பெறுமென்று காட்டுவாராகலினென்பது:

'ஐஞ்சீ ரடுக்கலு மண்டில மாக்கலும்

வெண்பா யாப்பிற் குரிய வல்ல7

என நக்கீரனார் அடிநூலுள், 'வெண்பா யாப்பிற் குரியவல்ல வென்றமையால், ஆசிரியத்துக்கும் கலிக்கும் ஐஞ்சீரடி புகுதலும் மண்டலமாக்கலும் உரியவென்று விரித்துரைத்தார் எனக் கொள்க.’

இவ்வாறு உரையாசிரியர் கூறுவதனால், நக்கீரனார் அடிநூல் என்னும் ஒரு செய்யுளிலக்கண நூல் இருந்ததென்பது தெரிகிறது. இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.

இந்த அடிநூல் செய்த நக்கீரர் சங்ககாலத்து நக்கீரரா அல்லது பிற்காலத்திலிருந்த வேறு ஒருவரா என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது. இது பிற்காலத்து நூல்போலத் தோன்றுகிறது.

22. நக்கீரர் நாலடி நானூறு

இப்பெயருடைய செய்யுளிலக்கண நூல் ஒன்று இருந்த தென்பது யாப்பருங்கல விருத்தியுரையினால் தெரிகிறது. மேலே கூறப்பட்ட நக்கீரர் அடிநூலின் வேறானது இது. நக்கீரர் நாலடி நானூறு என்னும் நூல், நக்கீரர் அடிநூலுக்குப் புறனடை நூலாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.

யாப்பருங்கலம், செய்யுளியல் 4ஆம் சூத்திர விருத்தியுரையில், வெண்பா இலக்கணத்தைக் கூறுகிற இடத்தில், சில வெண்பாக்களை மேற்கோள் காட்டிய விருத்தியுரைகாரர். “இன்னவை பிறவும் நக்கீரர் நாலடி நானூற்றில் வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை” என்று எழுதுகிறார்.

இதனால், நக்கீரர் நாலடி என்னும் நூல் வெண்பாவினால் ஆன நானூறு பாக்களையுடைய நூல் என்பதும், அப்பாக்கள் வண்ணத்தினால் தூங்கிசைச் செப்பலோசையோடு அமைந்திருந்தன என்பதும் தெரிகின்றன.

இந்நூலைப் பற்றி வேறு செய்திகள் தெரியவில்லை.