உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 16.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு

185

சுந்தரசுவாமிகள் இயற்றிய நூல்களாவன. சம்பிர தாயப்பிர கரணம், சுவானுபூதிரசாயனம், சுவானுபூதி ரச மஞ்சரி, மனோநாச மார்க்கம், மகாவாக்கியச் சுருக்கம்.

சந்திரசேகர கவிராச பண்டிதர் (?-1883)

சோழநாட்டுத் தில்லையம்பூர் இவரது ஊர். சென்னையில் இருந்த திருத்தணிகை விசாகப் பெருமாளையர் சரவணப் பெருமாளையர் என்னும் வீர சைவச் சகோதரர்களிடத்தில் கல்வி பயின்றார். சித்தூர் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக இருந்தார். கும்பகோணம் கல்லூரியில் ஆறுமாத காலம் தமிழாசிரியராக இருந்தார்.

மகா வித்வான் மகாலிங்கையர், இயற்றமிழாசிரியர் இராமநுச் கவிராயர், தாண்டவராய முதலியார். திருவாவடுதுறை ஆதீனத்துத் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், பொன்னுசாமித் தேவர் முதலியவர் களிடம் நண்பராகப் பழகினார்.

திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர்மீது மும்மணிக் கோவை பாடினார். பொன்னுசாமித் தேவர் விருப்பப்படித் தனிப் பாடல்களைத் திரட்டி அச்சிற் பதிப்பித்தார்.

தமது ஆசிரியர்கள் இயற்றிய பாலபோத இலக்கணம், நன்னூற் காண்டிகையுரை, ஐந்திலக்கண வினாவிடை முதலிய நூல்களை அச்சிட்டார். அன்றியும் நன்னூல் விருத்தியுரை, யாப்பருங்கலக் காரிகை யுரை, வெண்பாப் பாட்டியல் உரை, செய்யுட்கோவை, பழமொழித்திரட்டு, அரபத்த நாவலர் இயற்றிய பரத நூல் முதலிய பழைய நூல்களை ஏட்டுச் சுவடியிலிருந்து அச்சுப் புத்தகமாக அச்சிற் பதிப்பித்தார். தண்டியலங்கார மூலத்தையும் அதற்குச் சுப்பிரமணிய தேசிகராற் செய்யப்பட்ட உரையையும் பரிசோதித்து 1858 - இல் அச்சிற் பதிப்பித்தார். வருஷாதிநூற் சித்தாந்த விளக்கமும் அறுபது வருஷ பலனும் என்னும் பழைய நூலை ஆராய்ந்து 1875-ஆம் ஆண்டில் அச்சிட்டார்.

குமார குலசிங்கமுதலியார் (?-1884)

-

யாழ்ப்பாணத்துத் தெல்லிப்பதை இவர் ஊர். கிறிஸ்துவர். நியாய சபைகளில் துவிபாஷியாக இருந்தவர். பல தனிக் கவிகளையும் சில செய்யுள் நூல்களையும் இயற்றினார். அவகையில் இப்போது கிடைத்திருப்பது பதிவிரதை விலாசம் என்னும் நூல்.