உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

மேலின் நாமந்தான் உம்பர் மேற்குமாம் கிழக்குக் கீழே

என்பது சூடாமணி நிகண்டு.

41

மேலின் பெயர் உம்பர், மேற்கு என்பன. கீழின் பெயர் கிழக்கு என்பது இதன் பொருள்.

இதனால், பண்டைக் காலத்தில் கிழக்கு மேற்கு என்னும் சொற்கள் பள்ளம், மேடு என்னும் பொருளில் வழங்கப்பட்டன என்பது தெரிகிறது; திசைகளின் பெயராகக் கிழக்கு மேற்கு என்னும் சொற்கள் அக்காலத்தில் வழங்கப்படவில்லை. குணக்கு, குடக்கு என்னும் சொற்கள் அக்காலத்தில் திசைகளின் பெயராக வழங்கப்பட்டன. பண்டைக் காலத்தில் வழங்கிய திசைப்பெயர்களைப் பழைய நூல்களிலிருந்து காட்டுவோம்.

வடக்குந் தெற்கும் குணக்கும் குடக்கும் வேங்கடம் குமரி தீம்புனல் பௌவமென்று இந்நான் கெல்லை யகவயிற் கிடந்த நூலதின் நுண்மை வாலிதின் விரிப்பின்

என்றார் பனம்பாரனார்.

குமரி வேங்கடம் குணகுட கடலா

மண்திணி மருங்கில் தண்தமிழ் வரைப்பில்3

என்றார் இளங்கோ அடிகள்.

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும் குடாஅது தொன்முதிர் பௌவத்துக் குடக்கும்4

என்பது புறநானூறு.

வெயிலிளஞ் செல்வன் விரிகதிர் பரப்பிக் குணதிசைக் குன்றத் துயர்மிசைத் தோன்றக் குடதிசை யாளும் கொற்ற வேந்தன்

வடதிசைத் தும்பை வாகையொடு முடித்துத் தென்திசைப் பெயர்ந்த வென்றித் தானையொடு5

என்பது சிலப்பதிகாரம்.