உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

43

அதாவது பூருவம், குணக்கு, பிராசி, ஐந்திரி என்பன கிழக்குத் திசையின் பெயர்கள் என்றும் குடக்கு, வாருணம், மேக்கு, பச்சிமம், என்பன மேற்குத் திசையின் பெயர்கள் என்றும் கூறுகிறது. (இவற்றில் குணக்கு, குடக்கு, கிழக்கு, மேற்கு என்பதைத் தவிர மற்றச் சொற்கள் வடமொழிச் சொற்கள்.)

குணக்கு, குடக்கு என்னும் திசைப் பெயர்கள் மறைந்து அவற்றிற்குப் பதில் கிழக்கு மேற்கு என்னும் பெயர்கள் எப்படி ஏற்பட்டன? கிழக்கு என்றால் பள்ளம், தாழ்வான இடம் என்றும் மேற்கு என்றால் மேடு, உயர்ந்த இடம் என்றும் பொருள்

மேலின் நாமந்தான் உம்பர் மேற்குமாம் கிழக்கு கீழே என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. அதாவது மேல் என்பதற்கு உம்பர் என்றும் மேற்கு என்றும் பெயர். கீழ் என்பதற்குக் கிழக்கு என்று பெயர் என்பதை நிகண்டு கூறுகிறது. அப்படியானால், கீழ் மேல் என்னும் சொற்கள் எப்படிக் குணக்குக்கும் குடக்குக்கும் பெயராக அமைந்தன?

தமிழ்நாட்டின் குணக்குப் பகுதி தாழ்ந்தும் குடக்குப் பகுதி உயர்ந்தும் இருக்கிறது அல்லவா? குணக்கிலும் குடக்கிலும், கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத்தொடர்ச்சி மலையும் தமிழ்நாட்டில் இருந்த போதிலும், குணக்குப் பக்கம் தாழ்ந்தும் குடக்குப் பக்கம் உயர்ந்தும் இருப்பதை நில அமைப்பை ஆராய்ந்தவர் நன்கறிவர். வட பெண்ணை, தென் பெண்ணை, பாலாறு, வெள்ளாறு, காவேரி, வைகை, தாமிரபரணி முதலிய ஆறுகள் குடக்கிலிருந்து குணக்குப் பக்கம் பாய்ந்து ஓடி, கீழ்க்கடலில் (வங்காளக் குடாக்கடலில்) கலக்கின்றன. அதாவது, மேல்பக்கத்திலிருந்து ஓடிவந்து கீழ்ப்பக்கமாகப் பாய் கின்றன. இதனாலும், தமிழ்நாட்டின் குடக்குத்திசை மேடு என்பதும் குணக்குத் திசை பள்ளம் என்பதும் தெரிகின்றன. இந்த இயற்கை யமைப்பைப் பண்டைக் காலத்துத் தமிழரும் அறிந்திருந்தார்கள். இந்த இயற்கையமைப்பை அறிந்திருந்த அவர்கள், குணக்குத் திசைப் பகுதியைக் கிழக்கு (தாழ்வான பக்கம்) என்றும், குடக்குத் திசைப் பகுதியை மேற்கு (மேடான இடம்) என்றும் வழங்கினார்கள். இந்தப் பெயர் வழக்கு மக்களிடத்தில் நன்றாகப் பரவிப் பயிலத் தொடங்கின. கிழக்கு மேற்கு என்றும் சொற்கள் பயின்று வந்தமையால், பழைய குணக்கு குடக்கு என்னும் சொற்கள் நாளடைவில் மறைந்துவிட்டன. இப்போது, குணக்கு, குடக்கு என்னும் சொற்களை நிகண்டிலும் பழைய நூல்களிலும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.