உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திங்கள்

திங்கள் என்றால், திங்கட்கிழமையைப் பற்றி ஏதோ கூறப் போகிறதாகக் கருதுகிறீர்களா? இல்லை; திங்கட் கிழமையைப் பற்றி அல்ல; மாதத்தைப் பற்றிக் கூறப்போகிறேன். இக்காலத்தில் மாதம், மாசம் என்று கூறுகிறோம். அந்தச் சொல்லுக்குத் தமிழில் திங்கள் என்பது பெயர். மாசம், மாதம் என்பன வடமொழிச் சொற்கள்; இவை பிற்காலத்தில் தமிழில் வழங்கப்படுகின்றன. மாதம் என்னும் சொல்லை வழங்குவதற்கு முன்பு பண்டைக்காலத்தில் திங்கள் என்னும் சொல் பேச்சுவழக்கிலும் நூல்வழக்கிலும் பயிலப்பட்டது. ஆனால், அண்மைக் காலத்தில் மாசம், மாதம் என்னும் சொற்கள் வழங்கத் தொடங்கிய பிறகு, திங்கள் என்னும் சொல் மறைந்துவிட்டது. இப்போது இச்சொல் நூல்வழக்கில் மட்டும் இருக்கிறது. இதைப்போலவே ஆண்டு என்னும் சொல்லை வழங்காமல் வருஷம் என்னும் சொல்லை வழங்கி வருகிறோம். சொற்கள் ஆட்சியில் இல்லாவிட்டால் காலப்போக்கில் மறைந்துவிடும் அல்லவா?

அவை

மாதம் என்னும் பொருளில் திங்கள் என்னும் சொல் தமிழில் மட்டுமல்ல, தமிழ் (திராவிட) இன மொழிகளாகிய மலையாளம், கன்னடம், கோட்ட, தோட, குடகு, துளு, கடய் ஆகிய மொழிகளிலும் வழங்கி வருகின்றது. மலையாளிகள் திங்கள் என்னும் சொல்லைத் திங்ஙள் என்று வழங்குகிறார்கள். திங்கள் என்றால் மாதம் என்பது பொருள். திங்ஙள் கோப்பு, திங்ஙள் பணம், திங்ஙள் பஜனம் என்னும் சொற்கள் இன்றும் மலையாள மொழியில் உண்டு. மற்றொரு திராவிட இன மொழியாகிய கன்னட மொழியிலும் திங்கள் என்னும் சொல், பேச்சு வழக்கிலும் நூல் வழக்கிலும் இன்றும் வழங்கப்படுகிறது. கன்னட மொழிக்காரர் திங்கள் என்னும் சொல்லைத் திங்களு என்று கூறுகிறார்கள். திங்களு என்றால் கன்னடமொழியில் மாதம் என்பது பொருள்.

கோட்ட மொழியில் திகள் என்றால் நிலா; திங்கள் என்றால் மாதம். தோடர் மொழியில் திகள் என்றால் நிலா, தீள் என்றால் மாதம். குடகு மொழியில் திங்கள் என்றால் மாதம் என்பது பொருள். துளு மொழியில் திங்கொளு என்பது நிலாவுக்கும் மாதத்துக்கும் பெயர்.