உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு யவனரின் வாணிபத் தொடர்பு நின்றுபோயிற்று. அப்போது, அராபியர் அந்த வாணிபத்தை ஏற்று நடத்தினார்கள். கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரையில் சேரநாட்டுடன் அராபியர் கப்பல் வாணிபம் செய்து, இந்நாட்டு மிளகை ஐரோப்பாக் கண்டத்து நாடுகளுக்குக் கொண்டு போய் விற்றுப் பெரும்பொருள் தேடினார்கள். அந்தக் காலத்தில் ஐரோப்பியர் நாகரிகம் அடையவில்லை. எல்லாவற்றிலும் பின்னடைந்திருந்தார்கள். உணவு வகையில் அவர்கள் அக்காலத்தில் பெரிதும் முட்டுப்பட்டனர். கார்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் குளிர் கடுமையாக இருக்கும். அக்காலத்தில் அவர்கள் உணவுக்குப் பெரிதும் முட்டுப்பட்டார்கள். ஆடு, மாடு முதலிய மாமிச உணவைப் பதப்படுத்தி வைப்பதற்கு மிளகு அவர்களுக்கு வேண்டியிருந்தது. அக்காலத்தில் மிளகு உற்பத்தி சேரநாட்டில் மட்டுமிருந்தது. சேரநாட்டு மிளகை அரேபியர் வாங்கிக்கொண்டு போய், ஐரோப்பிய நாடுகளில் அதிகவிலைக்கு விற்றுப் பெரிய ஊதியத்தைப் பெற்றார்கள்.

இதையறிந்த ஐரோப்பிய நாட்டினர் தாங்களும் சேர நாட்டுடன் வாணிபம் செய்து பொருள் திரட்ட எண்ணினார்கள். ஆனால் அரேபியர், சேரநாட்டுடன் ஐரோப்பியர் வியாபாரம் செய்வதற்கு இணங்கவில்லை. ஐரோப்பியர் சேரநாட்டுக்கு வராதபடி, பல வகையிலும் தடுத்தார்கள். ஆகவே, ஐரோப்பியர் சேரநாட்டுக்கு வர வேறு வழியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தார்கள். அந்த முயற்சியின் பயனாகக் கொலம்பசு என்பவரால் அமெரிக்காக் கண்டம் எனப்படும் புதிய கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. போர்ச்சுசீசியர், ஸ்பானியர் முதலிய ஐரோப்பிய சாதியார், அமெரிக்கா கண்டத்திற்குச் சென்றார்கள்.

இதற்கிடையில் கி.பி. 15-ஆம் நூற்றாண்டில், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு கடல் மார்க்கமாகச் சேரநாட்டுக்கு வரும் வழியை வாஸ்கோ-ட-காமா என்னும் ஐரோப்பியர் கண்டு பிடித்தார். உடனே போர்ச்சுகல் நாட்டிலிருந்து போர்ச்சுகீசியர் சேரநாட்டுக்கு வந்து மிளகு வியாபாரம் செய்தார்கள். அவர்கள், தென் அமெரிக்கா கண்டத்திருந்து மிளகாய் என்னும் புதிய ஒரு காயைக் கொண்டு வந்து ஐரோப்பா கண்டத்திலும், நமது நாட்டிலும் புகுத்தினார்கள். மேலும், போர்ச்சுகீசியர் (ஜாவா, சுமாத்திரா முதலிய) கிழக்கிந்தியத் தீவுகளைக் கைப்பற்றி, சேரநாட்டில் மட்டும் விளைந்திருந்த மிளகை, அக்கிழக் கிந்தியத் தீவுகளிலும் கொண்டு போய்ப் பயிரிடத் தொடங்கினார்கள்.