உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழினி - யவனிகா

நாடக மேடையில் திரையிடுகிறார்கள் அல்லவா? அந்தத் திரைக்குத் தமிழில் எழினி என்றும் சமஸ்கிருதத்தில் யவனிகா என்றும் பெயர். திரைச்சீலை என்னும் பொருள் உடைய யவனிகா என்னும் சமஸ்கிருதச் சொல், யவன என்னும் சொல்லிலிருந்து தோன்றியது என்று சிலர் கூறுகிறார்கள். யவன நாட்டிலிருந்து திரைச்சீலை நமது நாட்டுக்கு வந்தது என்றும் ஆகவே யவன நாட்டுத் திரைச்சீலைக்குச் சமஸ்கிருதக்காரர் யவனிகா என்று பெயர் கொடுத்தார்கள் என்றும் கூறப்படுகிறது. இது உண்மை போலவும் தோன்றுகிறது.

கிரேக்க நாட்டின் ஒரு பகுதிக்குப் பண்டைக் காலத்தில் அயோனியா என்று பெயர் இருந்தது. அயோனிய தேசத்துக் கிரேக்கர் அயோனியர் என்று அழைக்கப்பட்டனர். அயோனியராகிய கிரேக்கர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் யவனர் என்று கூறப்பட்டனர். யவனர் பண்டைக் காலத்தில் பேர்போன மாலுமிகளாக இருந்தனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, கி.பி. முதல் நூற்றாண்டிலே யவனருடைய கப்பல் வாணிகம் பாரத நாட்டிலும் தமிழ்நாட்டிலும் இலங்கைத் தீவிலும் நடைபெற்று வந்தது. ஆகவே, தமிழரும் சமஸ்கிருதக்காரரும் கிரேக்கரை யவனர் என்னும் பெயரினால் அறிந்திருந்தார்கள். யவனர் தமது நாட்டிலிருந்து கொண்டுவந்து நமது நாட்டில் இறக்குமதி செய்த பொருள்களில் திரைச்சீலையும் ஒன்றாக இருக்கலாம் என்றும் ஆகவே யவன நாட்டிலிருந்து வந்த திரைச் சீலைக்குச் சமஸ்கிருத மொழியில் யவனிகா என்று பெயர் ஏற்பட்டது என்றும் கருதுவது மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

ஆனால் ஆராய்ந்துபார்த்தால் இவ்வாறு கருதுவது தவறு என்றும், யவனிகா என்னும் சமஸ்கிருதச் சொல் எழினி என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு என்றும் தெரிகிறது. தமிழிலிருந்து பல சொற்களைச் சமஸ்கிருத மொழி கடனாகப் பெற்றுக்கொண்டிருப்பதில் எழினி என்னும் சொல்லும் ஒன்றாகும். இவ்வாறு கூறுவது சிலருக்குப் புதுமையாகவும், வியப்பாகவும் தோன்றும். இந்தக் கட்டுரையில் இதனைத் தெளிவாக விளக்கிக் கூறுவோம்.