உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

101

இப்படிச் சொன்னால் சம்ஸ்கிருதக்காரர்கள் ஒப்புக்கொள் வார்களா? சம்ஸ்கிருதத்திலிருந்துதான் மற்றப் பாஷைகள் சொற் களைக் கடன் வாங்கின, சம்ஸ்கிருதம் மற்ற பாஷைகளிலிருந்து கடன் வாங்கவில்லை என்று நம்புகிற, சொல்லுகிற சம்ஸ்கிருதப் பண்டிதர்கள் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இருக்கிறார்கள். அவர்கள், எழினி என்னும் தமிழ்ச்சொல்லைச் சமஸ்கிருத மொழி கடனாகப் பெற்றுக் கொண்டு யவனிகா என்று வழங்குகிறது என்று சொன்னால், இதை ஏற்றுக்கொள்வார்களா? ஏற்கமாட்டார்கள். ஆனால் சம்ஸ்கிருத மொழியிலிருந்தே இதற்குச் சான்று காட்டினால் அறிவாளிகள் ஏற்றுக் கொள்வார்கள் அல்லவா?ஆகவே சம்ஸ்கிருதத்திலிருந்தே இதற்குச் சான்று காட்டுவேன்.

சான்று காட்டுவதற்கு முன்னர் இன்னொரு செய்தியையும் தெளிவுபடுத்த வேண்டும். அதென்னவென்றால், கிரேக்கக் கப்பல் வணிகர் திரைச்சீலைகளை நமது நாட்டில் கொண்டு வந்து இறக்குமதி செய்தார்களா? என்பதுதான். யவனக் கப்பலோட்டிகள் வாணிகப் பொருள்களாகக் கொண்டுவந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களும் ஏற்றுமதி செய்துகொண்டு போன பொருள்களும் இன்னின்னவை என்பதைக் கிரேக்கர்கள் எழுதி வைத்திருக்கிற பழைய நூல்களிலிருந்து நாம் அறிகிறோம். கிரேக்கர் நமது தேசத்தில் இறக்குமதி செய்த பொருள்களில் திரைச்சீலை கூறப்படவில்லை. யவன நாட்டிலிருந்து திரைச் சீலைகள் நமது தேசத்துக்கு வந்திருக்கவும் முடியாது. ஏனென்றால் அந்தக் காலத்தில் பருத்தித் துணிகளுக்குப் பெயர் பெற்றிருந்தது பாரத தேசமும் தமிழ் நாடும் தான். யவன தேசம் அந்தக் காலத்தில் பருத்தித் துணிகளுக்குப் பெயர் பெறவில்லை. யவன நாட்டிலிருந்து துணிகள் ஏற்றுமதியாக வில்லை. எனவே, பருத்தித் துணிகளினால்

செய்யப்படும் எழினிகள் (திரைகள்) யவன நாட்டிலிருந்து நமது நாட்டுக்கு இறக்குமதி ஆகியிருக்க முடியாது. பருத்தித் துணிக்குப் பேர்பெற்றிருந்த பாரத தேசம், அத்தொழிலில் வளம் பெறாத யவன நாட்டிலிருந்து திரைச்சீலைகளை இறக்குமதி செய்தது என்றும், யவனர்களால் இறக்குமதியான திரைச்சீலைக்கு யவனிகா என்று பெயர் வந்தது என்றும் கூறுவது பொருத்தமற்றதும் தவறானதும் ஆகும். அது சிறிதும் பொருந்தாது.