உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

மேலும் ஆதிகாலத்திலே கிரேக்கர் தமது நாடக அரங்க மேடைகளிலே திரைச்சீலைகளை அமைக்கும் பழக்கம் உடையவர் அல்லர். மிகப் பிற்காலத்திலேதான் அவர்கள் நாடக மேடைகளில் திரைச்சீலைகளை அமைக்கும் வழக்கத்தைக் கற்றனர். நாடக மேடையில் திரை அமைக்கும் பழக்கம் இல்லாத யவன நாட்டிலிருந்து திரைச்சீலை பாரத தேசத்தில் இறக்குமதியாயிற்று என்று கூறுவது எவ்வாறு பொருந்தும்? ஆகவே, யவனிகா என்னும் சொல் யவன என்னும் சொல்லிலிருந்து உண்டானது அன்று என்பது நிச்சயமாகத் தெரிகிறது.

எழினி என்னும் தமிழ்ச் சொல் சம்ஸ்கிருதத்தில் யவனிகா என்றாயிற்று என்பதற்குச் சான்று காட்டுவதற்கு முன்னர் இன் னொன்றையும் இங்குக் கூற வேண்டும். எழினி என்னும் சொல் திரைச் சீலைக்குப் பெயராக வழங்கியதும் அல்லாமல், தமிழ் நாட்டிலே மனிதருக்கும் பெயராக அமைந்திருந்தது. எழினி என்னும் பெயருள்ள சிற்றரசர் பரம்பரை ஒன்று தமிழ் நாட்டில் இருந்தது. எழினி அரசர்களைப் பற்றிச் சங்க நூல்களிலே காண்கிறோம். “அதிகமான் எழினி” என்னும் அரசன் தகடூர்ப் போரிலே உயிர் இழந்தான். அவனை அரிசில் கிழார் என்னும் புலவர்,

66

'வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள் பொய்யா எழினி பொருதுகளம்சேர

என்று (புறம் 230) பாடுகிறார்.

99

“வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வேல், எழிQ” என்பவனை ஒளவையார் கூறுகிறார் (குறுந்தொகை 80) "மதியேர் வெண்குடை யதியர் கோமான், நெடும்பூண் எழினி” என்பவனை அவரே பாடுகிறார். (புறம் 392), "சில்பரிக் குதிரைப் பல்வேல் எழினி”யைத் தாயங் கண்ணனார் என்னும் புலவர் பாடுகிறார். (அகம் 105) "போர்வல் யானைப் பொலம்பூண் எழினி”யை நக்கீரர் (அகம் 36) கூறுகிறார். பெருஞ்சித்திரனாரும் (புறம் 158), மாங்குடி மருதனாரும் (புறம் 396), மாமூலனாரும் (அகம் 197) எழினி என்னும் பெயருள்ள அரசனைப் பாடியுள்ளனர். எனவே, எழினி என்னும் பெயருள்ள அரச குடும்பம் ஒன்று இருந்தது என்பதும் அந்தக் குடும்பத்து அரசரைப் பல புலவர்கள் பாடியுள்ளனர் என்பதும் தெரிகின்றன.