உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

155

வேண்டும் என்பதே. தென்புலத்தார் என்பவர், உயிர் நீத்து உலகத்தை விட்டுப் போய்விட்டவர் அல்லர் என்பது மட்டும் துணியப்படும். என்னை? இல்லறத்தான் இவ்வுலகத்தில் வாழ்ந்து உணவு உண்கிறவர் களுக்கு மட்டும் உணவு கொடுக்க முடியுமேயல்லாமல் மற்றவர்க்குக் கொடுக்க முடியாதன்றோ? ஆகவே, இதற்கு (தென்புலத்தார் என்பதற்கு) வேறு செம்பொருள் இருக்க வேண்டும்.

இனி, இன்னோர் இடத்தில் தெய்வம் என்னும் சொல்லைத் திருவள்ளுவர் ஆண்டிருப்பதைக் காட்டுவோம்:

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை

இக்குறளிலும் தெய்வம் என்னும் சொல்லுக்கு முனிவர் என்பது பொருள் எனத் தோன்றுகிறது. ஆனால், பரிமேலழகர், “பிற தெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கொழுநன்” என்று பொருள் கூறியுள்ளார். இது தமிழ்ப் பண்புக்கு முரண்பட்டதாகும். ஆண்களைப்போலவே பெண்மக்களும் முழுமுதற் கடவுளைத் தொழுது வீடுபெறவேண்டும் என்பது தமிழர் பண்பு. என்னை? வைணவர்களிலும் சைவர்களிலும் பெண்பாலார் பலர் தத்தம் கருத்திற்கொண்ட முழுமுதற் கடவுளை வணங்கி வீடுபெற்றிருக்கின்றனர். ஆகவே, இங்குத் தெய்வம் என்றது முழுமுதற் கடவுளைக் குறிப்பது அன்று; துறவிகளைக் (கடவுளரைக்) குறிக்கிறதாகத் தோன்றுகிறது. கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைவிட்டுத் துறவிகளைத் (தெய்வங்களை – கடவுள்களை)த் தொழுது கொண்டிருக்கும் பெண்களுக்காகக் கூறியது இத்திருக்குறள் என்று தோன்றுகிறது. பெண்மக்களில் பலர் துறவிகளை அளவுக்கு மேல் அதிகமாகப் போற்றுகிற வழக்கத்தை இக்காலத்திலும் கொண்டுள்ளனர். கணவனுக்குச் செய்யவேண்டிய கடமையை மறந்து துறவிகளையே போற்றித் திரியக்கூடாது என்பது இக்குறளின் கருத்து என்று தோன்றுகிறது. இக்கருத்து பொருந்துமாயின், இக்குறளில் உள்ள தெய்வம் என்னும் சொல்லுக்கு முனிவர், துறவிகள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

இதுகாறும் கூறியவற்றால், கடவுள் என்னும் சொல் முனிவர் களான துறவிகளைக் குறிக்கும் என்றும், அது போன்றே தெய்வம் என்னும் சொல்லும் துறவிகள் எனப் பொருள்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டன.