உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

“உன் மகள்*

திருமணம் முடிந்த பிறகு, மணமகள் எல்லோரிடத்திலும் விடை பெற்றுக்கொண்டு மணமகனுடன் ஊருக்குப் புறப்படுகிறாள். மணமகளின் ‘தலைவிதி' மணமகனுடன் புறப்பட்டுப் போவது தவிர வேறு வழியில்லை. மனிதப் பிறப்பிலே, வாழ்க்கையின் அமைப்பிலே இது ஓர் இன்றியமையாத நிகழ்ச்சி. மனிதன் நாகரிகம் பெற்ற காலம் முதல், அன்றும் இன்றும் என்றும் நடந்துவருகிற, நடக்கப் போகிற தவிர்க்கமுடியாத நிகழ்ச்சி இது. எல்லா நாட்டிலும், எல்லாக் காலத்திலும், எல்லா மக்களுக்கும் பொதுவான இயற்கைச் சட்டம் இது. தாய் தந்தையார் மணம் செய்து வைத்து இல்வாழ்க்கையிலே அமர்த்தி னாலும் சரி, தானாகவே காதல் கொண்டு இல்லறத்தில் அமர்ந்தாலும் சரி, மணமகள் தாயகத்தைவிட்டு மணமகன் இல்லத்திற்குப் போக வேண்டியவள் தான்.

இந்த முறையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே ஒரு நிகழ்ச்சி நடந்தது. கன்னிப்பெண் ஒருத்தி தான் காதலித்த வாலிபக் காளையுடன் யாருக்கும் சொல்லாமல் ஊரைவிட்டு வெளியேறினாள். அன்பு நிறைந்த பெற்றோரையும், கனிவுமிக்க சுற்றத்தாரையும், இனிமையான நண்பர்களையும் மறந்து ஓர் இளமங்கை தான் விரும்பிய காளையுடன் வழி நடந்தாள் என்றால், அதற்குக் காதலின் அளவிடமுடியாத ஆற்றலைத் தவிர வேறு காரணம் இருக்கமுடியாது அல்லவா? மகனின் பிரிவு தாயின் மனத்தை உறுத்தியது. அனலில் பட்ட மெழுகுபோலத் தாயின் மனம் உருகிற்று. உயிர் அனைய மகளின் பிரிவு அவளுக்குத் தீராத் துயரத்தை அளித்தது. அவள், அவர்கள் போன வழியைப் பின் தொடர்ந்து சென்றாள். ஊருக்கப்பால் சாலை வழியே நடந்தாள். அவர்கள் காணப்படவில்லை. தொடர்ந்து சாலை வழியே வேகமாக நடந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம் ஒருவரும் புலப்பட வில்லை. விடாமல் தொடர்ந்து நடந்தாள்.

சில பெரியவர்கள் எதிர்ப்பட்டார்கள். “என் மகளும் ஒரு வாலிபனும் போவதை வழியில் கண்டீர்களா?” என்று ஆவலோடு வினாவினாள் அந்தத் தாய்.

  • சமயங்கள் வளர்த்த தமிழ் (1966) எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரை.