உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 18

(பிக்ஷுணிகள்) என்ற பெயர் வழங்கப்பட்டிருந்ததேயன்றி கௌந்தி அல்லது கந்தி என்னும் பெயர்கள் வழங்கப்படவில்லை.

66

“நந்திய பிண்டிவாமன் நன்னெறிவழாது நோற்பாள் கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப

99

என்று சூடாமணி நிகண்டில் அவ்வை, அம்மை, கன்னி என்னும் சொற்களும் சமண சமயப் பெண்பால் துறவிகளைக் குறிக்கும் என்று கூறியிருப்பதை ஒப்புக்கொள்வதற்கில்லை. ஏனென்றால், சங்க காலத்திலும் அதற்குப் பிற்பட்ட காலத்திலும் இருந்த அவ்வையார்கள் சமண சமயத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வயது முதிர்ந்த பெண்பாலர் எந்தச் சமயத்தவராயிருந்தாலும் அவர்கள் அவ்வையார் என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தனர். அதுபோலவே, அம்மை, கன்னி என்னும் சொற்களும் பொதுவாக எல்லாப் பெண்பாலரையும் குறிக்கும் சொற்கள். ஆகையால், அவ்வை, அம்மை, கன்னி என்னும் சொற்களையும் சமண சமயப் பெண்பால் துறவிகளுக்குப் பெயராகச் சொல்லி யிருப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

இதுகாறும் ஆராய்ந்தவற்றால், கௌந்தி அல்லது கந்தி என்னும் சொற்கள் சமண சமயத்தில் துறவு பூண்ட பெண்பாலரைக் குறிக்கும் என்பதை அறிந்தோம். எனவே, சீவக சிந்தாமணியில் இடைச்செருகற் பாக்களை இயற்றி நுழைத்த கந்தியார் என்பவர் சமண சமயத்தவர் என்றும், பெண்பாலார் என்றும் அங்கை நெல்லிக்கனியென விளங்கு கின்றது. இவரது வரலாறு வேறொன்றும் தெரியாதபடியால், இவரது காலத்தை ஆராய்ச்சிசெய்து முடிவுசொல்ல இயலவில்லை. இது நிற்க.

66

“பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண்பெயர்" என்னும் திவாகரம், பிங்கலந்தைச் சூத்திரங்களில் பைம்மை என்னும் சொல்லும், துறவுபூண்ட பெண்பாற் பெயரென்று கூறப்பட்டிருக்கின்றது. கணவனை இழந்து தாபத நிலையடைந்த பெண்கள் மறுமைப் பயனை நோக்கி நோற்கும் நோன்பிற்குக் கைம்மை நோன்பு என்று தமிழ் நூல்கள் கூறுவது போல, மணம் செய்துகொள்ளாமலே துறவு பூண்ட பெண்பாலார் மறுமைப் பயனைக் குறியாக நோற்கும் நோன்பிற்குப் பைம்மை நோன்பு என்று பண்டைக்காலத்தில் வழங்கி வந்திருக்கக் கூடுமோ என்று எண்ண இடமுண்டாகிறது. அதாவது கைம்மை, பைம்மை என்னும் சொற்கள் உண்டாவதற்கு ஏதோ காரணம் இருந்திருக்க வேண்டும். இதைப் பற்றி ஆராய்ந்து முடிவுசொல்வது கற்றறிந்த அறிஞர்களின் கடனாகும்.