உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-18

'வெள்ளக்கால் திருவாளர் வெ.ப. சுப்பிரமணிய முதலியாரவர் களை நெருங்கிப் பழகினவர் ஒருவரேனும் அவரை ஒரு குடுகுடு கிழவரென்று கூறத் துணியாரென்பது உறுதி. அவரது சுறுசுறுப்பைக் கண்ட எந்த இளைஞனும் அவர்முன் நாணித் தலை குனிந்து விடுவான். ஏதேனும் ஒரு விஷயத்தைக் குறித்து முதலியாரவர்களோடு வாதப்பிரதிவாதம் செய்யத் தொடங்கினால் போதும்; அவருக்கு ஊக்கம் எப்படியோ உண்டாகிறது; விருத்தர் குமரராகி விடுகிறார்’ என்று எழுதுகிறார். பிறகு

'எண்பதாண் டான இளைஞனே! இன்னமுதின்

பண்பெலாங் காட்டு தமிழ்ப்பாவலனே! - நண்பனே! வெள்ளகாற் செல்வனே! வேள்சுப் பிரமணிய வள்ளலே! வாழ்க மகிழ்ந்து!'

என்று வாழ்த்துகிறார்.

வெ.ப.சு. அவர்களை 'எண்பதாண்டான இளைஞர்' என்று கவிமணியவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை; வெறும் புகழ்ச்சி, உயர்வு நவிற்சி என்று கருதவேண்டா. திரு.வெ.ப.சு. அவர்களை இக் கட்டுரையாளர் பல ஆண்டுகளுக்கு முன்பு நேரில் கண்டு இருக்கிறார். அப்போது, வெ.ப.சு. அவர்களின் முதுமையில் இளமையைக் கண்டு வியந்தார். இக்கட்டுரையாளர் சென்னை மயிலாப்பூர் இராமகிருஷ்ண மடத்தில், முத்தமிழ்ப் பேராசிரியர் தவத்திரு. விபுலாநந்த அடிகளாரோடு இருந்தபோது, திரு.வெ.ப.சு. அவர்கள் அடிகளாரைக் காண வந்தார்கள். அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகையால் அடிகள் முதலியாரை வரவேற்று அளவளாவினார்கள். அடிகள் அமரச் சொல்லி யும் அமராமலே திரு. வெ.ப.சு. நின்றுகொண்டே அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தார். இக்கட்டுரையாளரும் அருகில் நின்று காண்டே முதலியாரவர்களைக் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். முதிர்ந்த வயதிலும் முதலியார் அவர்கள் சுறுசுறுப் புள்ள இளைஞராகக் காணப்பட்டார். அவருடைய மெல்லிய உடம்பில் இளமையும் உவகையும் தென்பட்டன. திரு. வெ.ப.சு. விடை பெற்றுச் சென்ற பிறகு, விபுலாநந்த அடிகள் 'இவர்தான் வெள்ளைக்கால் சுப்பிர மணிய முதலியார்' என்று கூறினார்கள். கவிமணி அவர்கள் வெ.ப.சு. அவர்களை, எண்பதாண்டான இளைஞர் என்று கூறுவது முற்றிலும் உண்மையே. முதுமையிலும் இளமையோடிருந்தவர் திரு. வெ.ப.சு. அவர்கள்.