உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

சிவத்துக்கு இருவித நிலை உண்டு. ஒன்று எல்லாவற்றையும் கடந்தது; மற்றொன்று எல்லாவற்றிலுங் கலந்தது. முன்னையது சொரூபம் என்றும் நிர்க்குணம் என்றும், பின்னையது தடஸ்தம் என்றும் சகுணம் என்றும் வழங்கப்படுகின்றன.

6

எல்லாவற்றையுங் கடந்த சிவத்துக்கு உருவம். அருவம், ஐந்தொழில் முதலியன இல்லை. இது, “சிவனுரு அருவுமல்லன் சித்தினோ டசித்து மல்லன், பவந்தரு தொழில்களொன்றும் பண்ணிடு வானுமல்லன்” என வரும் மெய்கண்ட சாத்திரத்தால் வலியுறுத்தப்பெறுதல் காண்க.

சிவம் எல்லாவற்றிலும் கலந்த நிலை என்பது இயற்கையோடு இயைந்து நிற்பதாகும். சிவம், அறிவு (Spirit). இயற்கை, சடம் (Matter). சிவம், இயற்கையுடன் கலந்த நிலையில் இயக்கம் -அசைவு (motion) - உண்டாகிறது. தனித்த சிவத்துக்கும். தனித்த இயற்கைக்கும் இயக்கம் கிடையாது என்பது நியதி.

சிவம் தனித்தும், இயற்கையுடன் கலந்தும் நிற்கும் இயல்புடையது. இயற்கை தனித்து நிலவாது; அது சிவத்துடன் கலந்தே இயங்கும் இயல்பு வாய்ந்தது.

சிவமும் இயற்கையும் கலந்த நிலையை விளக்கும் கலைகள் உள. அவற்றுள் சிறந்த ஒன்று நமது தமிழ்நாட்டில் பொலிகிறது. அஃது எது? அதுவே சிதம்பரம் என்பது. சிதம்பரம் என்னும் கோயில் வெறும் கல்லன்று; மண்ணன்று; சுவரன்று; கட்டிடமன்று. பின்னை என்னை? அஃதொரு கலை.

அக்கலை மூன்று காண்டங்களைக் கொண்டது. ஒன்று ஞான சபை; மற்றொன்று நடராஜ மன்றம்; இன்னொன்று சிவகாமிப் பொது. ஞானசபை சிவத்தின் கடந்த நிலையை அறிவுறுத்துவது; சிவகாமி வடிவம் இயற்கை அன்னையின் அறிகுறி. கடந்த சிவம், இயற்கை சிவகாமியிடம் கலந்துள்ள நிலையில் எழும் இயக்கத்தை உணர்த்துவது நடராஜ ஓவியம். ஈண்டைக்கு நீண்ட விளக்கம் வேண்டுவதில்லை.