உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

அமைப்பதும் உண்டு. இத்தாண்டவ உருவம் எந்த விதமாக அமைக்கப்பட்டாலும், இதில் பாம்பு முக்கிய இடம் பெறுகிறது.

திருமலைப்புரத்துச் சிற்பம்

காத்தல் செயலைக் குறிக்கிற சந்தியா தாண்டவத்தின் சிற்ப உருவம் ஒன்று பாண்டி நாட்டிலே இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலைப்புரம் என்னும் ஊரில் வரதாட்சி மலையில் உள்ள குகைக் கோயிலின் பாறைச்சுவரில் இந்தச் சிற்பத்தின் உருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. காலப் பழைமை யினாலும் பேணிப் பாதுகாக்கப்படாதபடியாலும் இந்தச் சிற்பம் மழுங்கிக் கிடக்கிறது. (படம் 4 காண்க).

தாண்டவமூர்த்தியின் வலது கையில் இருக்க வேண்டிய துடியும், இடது கையில் இருக்கவேண்டிய தீச்சுடரும் இந்தச் சிற்பத்தில் காணப்படவில்லை. ஆனால், முயலகன் பாம்பு உருவமாகச் சிவபெருமானுடைய அரையில் சுற்றிக் கொண்டிருக்கிறான். சந்தியா தாண்டவத்தில் (காத்தல் தொழிலில்) சிவபெருமான் முயலகனாகிய பாம்பை அணிந்து தாண்டவம் புரிகிறார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன.

இச்சிற்பத்தின் ஒரு வலது கை ஏதோ ஒரு பொருளைப் பிடித்துக் கொண்டிருப்பது போலக் காணப்படுகிறது. பிடித்திருக்கிற பொருள் என்னவென்று சிற்பத்தில் காட்டப்படவில்லை. ஆனால், மயிலிறகு என்று ஐயம் இல்லாமல் கருதலாம். ஏனென்றால், சந்தியா தாண்டவத்தில் சிவபெருமான் ஒரு கையில் மயிலிறகு பிடித்திருக்கிறார் என்று சைவ சமய நூல்கள் கூறுகின்றன.மற்றொரு வலது கையைப் பாம்பின் தலைப்புறமாக அமைத்துப் பாம்புக்கு ஆதரவு கொடுப்பதுபோல உள்ளங்கையைக் கவிழ்த்திருக்கிறார்.

ஓர் இடது கையை கஜஹஸ்தமாக (வீசிய கரமாக) உயர்த்தித் தூக்கியிருக்கிறார். மற்றோர் இடது கையில் ஏதோ பொருளை ஏந்தி யிருக்கிறார். ஏந்தியிருக்கிறது என்ன பொருள் என்பது தெரியவில்லை.

கால்கள் கூத்தாடுவது போலக் குஞ்சித்து இருக்கின்றன. காலின் அடியில் முயலகன் இல்லையென்று முன்னமே கூறினோம். சிவபெருமானுடைய பக்கத்தில், காலடியில், குறள் உருவம் ஒன்று கைகட்டி நின்று நடனத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்தக் குறள்