உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

நடராச சிற்ப உருவங்கள் இவ்வளவுதான் என்று வாசகர்கள் முடிவுகட்டக் கூடாது. தாண்டவமூர்த்தங்களில் இன்னும் புதுமை யானவை பல இருக்கின்றன. அவைகளையெல்லாம் வெளியிடுவதற்குப் பொருளுதவி கிடைக்குமாயின், அவைகளையும் ஆராய்ச்சிக் குறிப்பு களுடன் வெளியிட இருக்கிறேன். ஆகவே, தாண்டவ மூர்த்தங்களின் சிற்ப உருவங்கள் இவ்வளவுதான் என்று கருதவேண்டா.

இந்நூலிலே வெளியிடப்பட்டுள்ள தாண்டவ மூர்த்தங்களின் படத்தைப் பார்க்கும்போது, நமது நாட்டிலே பழங்காலத்திலே சிற்பக் கலை எவ்வளவு உன்னத நிலையை அடைந்திருந்தது என்பதை அறிந்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது. கலைகளை எல்லாச் சமயத்தாரும் போற்றியிருக்கிறார்கள்; வளர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு மதத்துக் கலைகளிலும் தனித்தனிச் சிறப்புகள் உள்ளன. கலை என்பது எல்லோருக்கும் பொது. ஆகவே, கலையாராய்ச்சியில் விருப்பும், வெறுப்பும் இருத்தல் கூடாது. சமயக் காழ்ப்பு இல்லாமல் நடுநிலையில் இருந்து பார்த்தால்தான் கலைகளின் அழகு இனிது விளங்கும். நமது நாட்டுக் கோவில்களில் இருக்கிற இச்சிற்பங்களுக்குக் கணக்குண்டா? அவைகளை யெல்லாம் நாம் ஆராய்ந்து அவற்றில் காணப்படும் கலையின்பத்தைத் துய்க்க வேண்டாவோ?

சைவ சமயத்துச் சிற்பக் கலைகளில் ஒரு பகுதிதான் தாண்டவ மூர்த்தங்கள். வேறு சிற்பக் கலைப்பொருள்களும் சைவ சமயத்தில் உள்ளன. இவ்வாறே வைணவ சமயம், ஜைன சமயம் என்னும் மதங்களைச் சேர்ந்த சிற்ப உருவங்களும் நமது நாட்டிலே இருக்கின்றன. அக்கலைச் செல்வங்களைப் பற்றி, அறிவதற்குப் பொது மக்களிடையே ஆர்வம் பிறக்குமானால், அவற்றைப் பற்றிய நூல்களும் வெளிவரும் என்பதில் ஐயமில்லை.

“நெறியல்லா நெறிதன்னை

நெறியாக நினைவேனை

சிறுநெறிகள் சேராமே

திருவருளே சேரும்வண்ணம்

குறியொன்றும் இல்லாத

கூத்தன்தன் கூத்தை எனக்கு

அறியும் வண்ணம் அருளியவாறு

ஆர் பெறுவார் அச்சோவே!'

மாணிக்க வாசகர்.