உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேமிநாதம் - நந்திக்கலம்பகம் - பிறநூல்கள்

அறுகீரை :

6

195

இது குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்துவளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை என்று பெயர் உண்டாயிற்று. இதை அறைக்கீரை என்றும் கூறவர். அறுகீரை, தாது புஷ்டி தருகிற கீரைகளில் ஒன்று. இதைப் புளியிட்டுச் சமைப்பது வழக்கம். புளியில்லாமல் மிளகு சேர்த்து நெய் இட்டுச் சமைத்துச் சாப்பிட்டால் தாது வளரும். வாயுவைப் போக்கும். குளிர்ந்த தேகத் தோருக்கு உதவும். மூலநோய் உள்ளவருக்கு ஆகாது.

கொத்துமல்லிக் கீரை :

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவை களில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது உண்டு. துவையல் செய்தும் உண்ணலாம். இருதயத்துக்கு நல்லது. தலையையும் மூளையையும் பற்றிய சூட்டை மாற்றும். ஜூரணம் உண்டாகும். குளிர்ந்த தேகத் தோருக்கு உதவாது.

கீரைத் தண்டு:

இதில் வெண்மை, சிவப்பு என்னும் இரண்டு வகை உண்டு. இரண்டுக்கும், ஒரே குணந்தான். இந்தக் கீரையில் எலும்புக்கு உரம் அளிக்கிற கால்ஸியம் என்னும் சுண்ணாம்புப் பொருள் உண்டு. இரும்புச் சத்தும் உண்டு. இக்கீரை தேகச்சூட்டை ஆற்றும். நீர்சுருக்கு, வெட்டை இவற்றைப் போக்கும். குளிர்ந்த தேகத்தோருக்குச் சீதளம் செய்யும். வெள்ளுள்ளி (வெள்ளைப் பூண்டு) சேர்த்துச் சமைப்பது நல்லது.

சிறு கீரை:

இதுவும் கீரைத்தண்டு இனத்தைச் சேர்ந்தது. ஆனால், இலைகள் சிறியவை. கீரைத்தண்டிலும், முளைக்கீரையிலும் இருப்பதுபோலவே, இந்தக் கீரையிலும் கால்ஸியம் என்னும் எலும்பை வளர்க்கிற சத்து உண்டு. கண் புகைச்சல், காசம், சோகை ஆகிய நோய்களைப் போக்கும். சூட்டைத் தணிக்கும். இதில் அயச்சத்து (இரும்புச் சத்து) உண்டு.