உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

இதைக் கீழே கொட்டி வீணாக்கி விடுகிறார்கள். உப்புச் சத்துள்ள இந்த நீர் மிக முக்கியமானது. இதைக் கீழே கொட்டிவிடாமல், பத்திரமாகக் கீரையுடன் சேர்த்துச் சமைக்க வேண்டும். இந்த முக்கியமான செய்தியைச் சமையல் செய்வோர் கவனிக்க வேண்டும்.

நமது நாட்டில் ஆண்டு முழுவதும் ஏதேனும் கீரை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. ஆகவே, கீரைக்கு முட்டுப்பட வேண்டியது இல்லை. இடமும் வசதியும் உள்ளவர், தங்கள் வீட்டிலேயே ஏதேனும் கீரையைப் பயிரிட்டுக் கொள்ளலாம்.

பொதுவாகக் கீரைகளின் குணங்களை மேலே கூறியுள்ளோம். ஒவ்வொரு கீரையின் தனிக் குணங்களைக் கீழே தருகிறோம். அகத்திக் கீரை :

இதில் ஏ.சி. என்னும் விட்டமின்கள் உண்டு. கண்குளிரும். சூட்டைத் தணிக்கும். பித்தத்தைத் தணிக்கச் செய்யும். கார்த்திகை மாதத்தில் இதைச் சாப்பிட்டால் கொழுப்பு உண்டாகும் என்பர். நமது நாட்டில், சாவு நேர்ந்த வீடுகளில் அடுத்தநாள் அகத்திக்கீரை சாம்பார் செய்வது வழக்கம். இதன் காரணம் என்னவென்றால், சாவு நேர்ந்த வீட்டில் உள்ளவர்கள் பிணம் அடக்கம் செய்யப்படுகிற வரையில், சாப்பிடாமல் பட்டினிகிடப்பர். ஒருநாள் முழுவதும் பட்டினி கிடக்க நேரிடும். இதனால் உடம்பு சூடு கொள்ளும். அன்றியும் இறந்த வரைப் பற்றிய வருத்தத்தினால் இரத்தக் கொதிப்பும் ஏற்படும். இவ்விதம் நேரிட்ட சூட்டையும் இரத்தக் கொதிப்பையும் ஆற்றுவதற்காகத்தான் அகத்திக்கீரையை அடுத்தநாள் சமைத்து உண்ணும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

வைகுண்ட ஏகாதசியில் பலர் இரவு முழுவதும் கண்விழிப்பார்கள். இரவில் தூங்காமல் கண்விழிப்பதனால் உடம்பு சூடு அடையும். அச்சூட்டைத் தணிப்பதற்காக அகத்திக்கீரைக் குழம்பை அடுத்த நாள் சாப்பிடுவார்கள். இதனால், தேகச்சூட்டையும் இரத்தக் கொதிப்பையும் ஆற்றுகிற இயல்பு அகத்திக்கீரைக்கு உண்டு என்பது தெரிகிறது.

நாட்டுமருந்து சாப்பிடும்போது அகத்திக்கீரை சாப்பிடக் கூடாது. ஏனென்றால் மருந்தின் குணத்தை இக்கீரை முறித்துவிடும். அதனால் மருந்து சாப்பிட்டும் பயன் இல்லாமல் போகும்.