உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

மனிதருக்குப் பலப்பல காரணங்களினாலே பலப்பல நோய்கள் உண்டாகின்றன. நோய்களைத் தீர்க்க சிகிச்சைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நோய் வந்தபிறகு மருந்து கொடுத்து நோயைத் தீர்ப்பதைவிட நோயை வராமலே தடுப்பது மிக நல்லது. சரியான உணவைத் தகுந்த முறைப்படி உட்கொள்ளத காரணத் தினாலே நோய்கள் உண்டாகின்றன. தகுந்த உணவை தகுந்த முறைப்படி சமைத்து உண்போமானால் நோய்களை வராமல் தடுக்கலாம்.

எந்தெந்த உணவுப் பொருள்களில் எந்தெந்த உணவுச் சத்தும் உயிர்ச்சத்தும் இருக்கின்றன என்பதை அறிந்து அந்தந்த உணவுப் பொருள்களை உட்கொள்வோமானால், நோயை வராமல் தடுப்பதோடு உடல் நலத்தோடு இருக்கவும் முடியும் என்பது இந்நூலாசிரியர் அனுபவத்தில் கண்ட உண்மை.

இந்த இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞான காலம். விஞ்ஞானத்தின் மூலமாகப் பலதுறைகளிலும் அறிஞர்கள் ஆராய்ச்சி செய்து பல நன்மைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அவ்வாறே உணவுத்துறை யிலும் விஞ்ஞானத்தின் மூலமாக ஆராய்ச்சி செய்து எந்தெந்த உணவுப் பொருளில் என்னென்ன சத்துக்களும் விட்டமின்களும் உள்ளன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவைகளை எல்லோரும் அறிந்திருப்பது அவசியமாகும். அவற்றை அறிந்து அதன்படி உணவை உண்பதனாலே தேக ஆரோக்கியத்தைப் பெறலாம். மேலும் நோய் வராமல் தடுக்கலாம் என்னும் கருத்தோடு. பலருக்கும் பயன்படும்படி ‘உணவு நூல்' என்னும் இச்சிறு நூல் எழுதப்பட்டது. இந்நூல் பலருக்கும் பயன்படும் என்று நம்புகிறோம்.

மயிலாப்பூர்

சென்னை – 4

4

மயிலை சீனி. வேங்கடசாமி