உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 19.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

வாழைக்காய் :

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 19

இதில் பலவகை உண்டு. பொந்தன் (மொந்தன்) வாழைக்காயை மட்டும் கறி சமைப்பது வழக்கம். இதில் மாவு சத்து அதிகம் உண்டு. அயம் (இரும்புச்சத்து) இதில் உண்டு என்பர். தேகம் பருக்கும். தழைப் புண்டாகும். தீபனத்தை அடக்கும். மிளகு சீரகம் சேர்க்கவேண்டும். வாழைப்பிஞ்சு பத்தியத்திற்கு உதவும். மலத்தைக் கட்டும். வாழைக் காயின் மேல்தோலை மெல்லியதாகச் சீவிப்போட்டு, உள்தோலுடன் சமைக்க வேண்டும்.

வெண்டைக்காய் :

முற்றியகாய் கறிக்கு உதவாது. பிஞ்சுக்காயாக இருப்பது நலம். இதில் பி.சி. விட்டமின்கள் உண்டு. சூட்டை ஆற்றும். மந்தப்படுத்தும். சீரகம் சேர்க்கவேண்டும்.

முருங்கைக்காய் :

தாது புஷ்டி உண்டாகும். குடல் தழைக்கும். சூட்டுடம்புக்கு உதவாது. நெய் அல்லது புளி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பாகற்காய் :

இதில் கொம்பு பாகற்காய், மிதிபாகற்காய் முதலிய வகைகள் உண்டு. கசப்புச் சுவையுள்ளது. இதை வேக வைத்து நீரைக் கொட்டிவிட்டுச் சமைக்கவேண்டும். சூடு உண்டாக்கும். தீனிப் பையிலுள்ள பூச்சிகளைக் கொல்லும். புளிசேர்த்துச் சமைக்க வேண்டும்.

பயற்றங்காய் :

கபத்தை யறுக்கும். தீபனம் உண்டாக்கும். நீரைப் பெருக்கும்.

கிழங்குகள்

கிழங்குகள் தரைக்குள்ளே மண்ணில் விளைகின்றன. உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேமைக்கிழங்கு, காரட்கிழங்கு (மஞ்சள் முள்ளங்கி), முள்ளங்கி, பீட்ரூட், வெங்காயம், வெள்ளைப்பூண்டு முதலியவை கிழங்குகளாம். கிழங்குகள் சத்துள்ளவை.