உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழெழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?

23

கண்டித்ததும், சங்கராச்சாரியர் வேண்டுகோட் கிணங்கி ஒரு கல்வி நிலையத்தைத் திறந்து வைத்ததும், இன்னோரன்ன பிறவும், பெரியாரின் பண்புடைமையைப் புலப்படுத்தும்.

9. உண்மையுடைமை

பெரியார் என்றேனும் உண்மையை மறுத்ததாகவும் இல்லாததைச் சொன்னதாகவும், ஒரு குறிப்புமில்லை.

10. பகுத்தறிவூட்டல்

கல்வியமைச்சரும் பெரும் பேராசிரியரும் கல்வித்துறை யியக்குந ரும் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், நோபெல் பரிசு பெற்றோரும், உலக ஆராய்ச்சி மன்றத் தலைவரும் போலும், உயர்கல்வியாளர்க்கும் இல்லாத பகுத்தறிவை, எழுதப் படிக்கத் தெரியாத எளிய பொதுமகனுக் கூட்டியது, செயற்கரிய பெருஞ்செயலே.

இங்ஙனம் பெரியார் இயலும் செயலும் பல்வகைப்பட்டிருக்கவும், அவற்றுள் ஒன்றேனும் பின்பற்றாது, அவர் கருதாத எழுத்து மாற்றத்தையே மேற்கொள்வார், சாற்றை விட்டுச் சக்கையே பற்றும் பன்னாடை போல்வார். பெரியாரைப் பின்பற்றல் சிறியார்க்கு எளிதன்று.

பல்லாயிரவாண்டு பண்டாடு பழநடையாக வழங்கிவரும் தமிழ் மரபெழுத்தை, மறைமலையடிகளும் மாபெரும் புலவர் தலைவர் உ.வே. சாமிநாதையரும் போலும் தமிழதிகாரிகள் விருப்பத்திற்கு மாறாகவும், உலகெங்குமுள்ள தமிழ் நூலகமுடையார்க்கும் நூல் வெளியீட்டாளர்க்கும் பேரிழப்புண்டாகுமாறும், தமிழுக்கு ஒருவகையிலும் நலந்தரா முறையிலும், மாற்றுவதை விளம்பர விருப்பினர் உடனே விட்டொழிவாராக.

- "செந்தமிழ்ச் செல்வி" மார்ச்சு 1980