உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 50.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

பாவாணர் நோக்கில் பெருமக்கள்

கட்கு முன் மறியல் செய்த தமிழ்த்தொண்டர் சிறையிலிடப்பட்டனர். பெரியாரும் அதற்காளாயினார். முறைப்பட்ட தமிழ்க்காப்பு வகுப்பு வேற்றுமைக் கிளர்ச்சியாகத் திரிக்கப்பட்டது. சிறைத் தண்டனையுற்ற தமிழ்த்தொண்டரின் தற்காப்பிற்காக 'ஒப்பியன் மொழிநூல் முதற் புத்தகம்- முதற் பாகம்' என்னும் நூலை எழுதினேன். ஆயின், அதனை வெளியிடத் தமிழ்ச் செல்வரும் தமிழ்க் கட்சித் தலைவரும் முன்வரவில்லை; சிறு தொகையும் உதவவில்லை. அதனால், என் அடங்காத் தமிழ்ப்பற்றும் மடங்காத் தன்மானமும், என் கைப்பொருள்கொண்டு அதை வெளியிட்டு ஓராயிரம் ரூபா இழக்கச் செய்தன. அங்ஙனந் தாங்கொணாச் சூடு கண்ட தினால் அதன்பின் என் சொந்தச் செலவில் எத்தகை நூலையும் வெளியிட மிகவும் அஞ்சினேன். துணிந்து வெளியிடப் பொருளும் என்னிடமில்லை. அந் நிலையில், இலக்கணம், சொல்லாராய்ச்சி, மொழியாராய்ச்சி, அரசியல், வரலாறு, விளையாட்டு முதலிய இலக்கியப் பொருள் பற்றியன வும், புலமக்களன்றிப் பொதுமக்கள் வாங்காதனவும், விரைந்து விலை யாகாதனவும், ஆரிய வெறியர்க்கு மாறானவும், வெளியீட்டிற்குப் பெருஞ் செலவு செய்ய வேண்டியனவும், சிறியவற்றோடு பெரியனவுமான இயற் றமிழ் இலக்கணம், சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள், திரவிடத் தாய், சுட்டுவிளக்கம், முதற்றாய் மொழி, பழந்தமிழாட்சி, மாணவர் உயர்தரக் கட்டுரையிலக்கணம் (2 பாகம்) என்னும் எண்ணூல்களொடு, நான் ஏற்கெனவே வெளியிட்ட கட்டுரை வரைவியல் என்னும் நூலையும், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சி மேலாளரான தாமரைத்திரு வ. சுப்பையாப் பிள்ளை அவர்கள் வார முறை யில் (Royalty System) ஒவ்வொன்றாக வெளியிட்டு, விற்பு விலையில் நூற்றுமேனி 15 விழுக்காடு உரிமைத் தொகையும் ஆண்டிற் கிருமுறை கணித்து ஒழுங்காக அனுப்பிவந்திருக்கின்றார்கள். இதனால், நான் ஒருபோதும் வெளியிட்டிருக்க முடியாத பல அரிய நூல்கள் வெளிவந்து என் பெயர் உண்ணாடும் வெளிநாடும் பரவியதுடன், என் தமிழ்த்தொண் டும் பன் மடங்கு சிறந்து வந்திருக்கின்றது. அவர்கள் ஒப்பந்தப்படி விடுத்து வந்த அரையாட்டைத் தொகை, என் குறைந்த சம்பளக் காலத்தும் வேலை யில்லாக் காலத்தும் பெரிதும் உதவியதென்பதை நான் சொல்ல வேண்டுவ தில்லை. அதோடு, அவ்வப்போது நான் 'செந் தமிழ்ச் செல்வி'க்கு, விடுத்த வேர்ச்சொல் பற்றிய என் உரிமைக் கட்டுரைகட்கும், அவர்கள் அளித்து வந்த அன்பளிப்புத் தொகை எனக்குப் பேருதவியாயிருந்த தென்பதைச்

சொல்லாமலிருத்தற்கில்லை.

இனி அவர்கள் என் சொந்த வெளியீடான தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு, இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்? வண்ணனை மொழி நூலின் வழுவியல், திருக்குறள் தமிழ் மரபுரை என்னும் நூல்கள் அச்சானபோதும், எனக்கு மறைமலையடிகள் நூல்நிலையத்தில் தங்க இடந்தந்தும், இறுதிப் படிவ மெய்ப்புகளையெல்லாம் மூலத்துடன் ஒப்புநோக்கிப் பொறுமை யாகவும் செவ்வையாகவும் திருத்திக் கொடுத்தும், அச்சானவுடன் அழகாகக் குறித்த காலத்திற்குள் கட்டடம் செய்வித்தும்,