சாகுந்தல நாடகம்
83
ஓய்வுகிடையாது.ஏனென்றாற், ஓய்வுகிடையாது. ஏனென்றாற், பகலவன் ஒரேதடவையிற் பூட்டிய குதிரைகளோடுஞ் சென்று கொண்டேயிருக்கின்றான்; காற்று இரவும் பகலும் இயங்கிக்கொண்டே யிருக்கின்றது; சேடன் எப்போதும் நிலப்பொறையைச் சுமந்துகொண்டே யிருக்கின்றான். ஆறிலொரு கூறுபெறும் அரசன் கடமையும் அப்படியே யிருக்கின்றது. ஆகையால், யான் எனது கடமையைச் செய்வேன். (நடந்துபோய்ப் பார்த்து) தன் மக்களைப் போலக் குடிகளுடைய அலுவல்களை யெல்லாம் பார்த்து விட்டு நண்பகல் வெப்பத்தால் வெதும்பி அரசியானை யானது சுற்றிலுந் தன் யானை மந்தையைப் புல் மேயவிடுத்துத் தான் தனியே ஒரு குளிர்ந்த நீழலில் இளைப்பாறுதல் போல, அரசனும் இளைப்புற்ற மனத்தொடு தனியே இவ்விடத்தில் இறைப்பாறிக் கொண்டிருக்கின்றார். (கிட்டப் போய்) வேந்தற்கு வெற்றி சிறக்க! இமயமலைச் சாரலிலுள்ள துறவாசிரமத்தில் இருக்கும் முனிவர்கள் மாதர் இருவரோடுங் காசியப முனிவரிட மிருந்து செய்தி கொண்டு வந்திங்கே இருக்கின்றார்கள். இதன்மேல் தங்கள் கட்டளை.
அரசன் : (வணக்கத்தொடு) காசியபரிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களா?
கஞ்சுகி : வேறென்ன?
அரசன் : சுருதியிற் சொல்லப்பட்டவண்ணந் துறவா சிரமத்தில் இருப்பாரை வரவேற்பதற்குரிய வரிசைகள் செய்து அவர்களை உள்ளே அழைத்துவரும்படி புரோகிதர் சோம நாதருக்கு நான் சொன்னதாகத் தெரிவி. நானுந் துறவிகளைக் காண்பதற்குத் தகுதியான இடத்திற் போய் எதிர்பார்த்துக் கொண் டிருக்கின்றேன்.
கஞ்சுகி : தாங்கள் கட்டளையிடும் வண்ணமே. (போய் விடுகின்றான்.)
அரசன் : (எழுந்து) ஏடீ வேத்திரவதி! வேள்விக்களத்திற்குப் போகும் வழிகாட்டிச்செல்.