உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 18.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழியல் ஆய்வு : சொல்லாய்வுகள் - வாழ்க்கை வரலாறு

113

புலனாகிறது. அதாவது (மயிலாப்பூர் ஏரியின் கரையில் (ஆல் = நீர்) அமர்ந்தாள் (கோயில் கொண்டவள்) என்பது ஐயமின்றி விளங்குகிறது.

பழைய வரலாறு அறியாதவர், 'ஆலமர்ந்தாள் கோயிலுக்கு அருகில் இப்போது ஒரு சொட்டு நீரும் இல்லையே, ஆலமரந்தானே இருக்கிறது. ஆகையால் ஆலமரத்தின் கீழ் அமர்ந்தவள் என்னும் காரணப் பெயரையுடையது ஆலமர்ந்தாள் கோயில் என்பது’ என்று சொல்லக்கூடும். பழைய வரலாறு அறியாதவர்களுக்கு இது உண்மை யாகவும் தோன்றும். என்னுடைய வாழ்க்கையிலே நான் கண்ணாறக் கண்ட மயிலாப்பூர் ஏரி, மயிலாப்பூரைச் சேர்ந்த நிலபுலன்களுக்கு நீர் பாய்ச்சிய மயிலாப்பூர் ஏரி, என் வாழ்க்கைக் காலத்திலேயே மாட மாளிகைகள் நிறைந்து மக்கள் வாழும் நகரமாக மாறிப்போனதைக் கண்டேன். ஆகவே, மயிலாப்பூர் ஏரிக்கரையில் அமர்ந்த காளிக்கு ஆலமர்ந்தாள் (நீர்க்கரையில் அமர்ந்தவள்) என்று பழந்தமிழர் பெயரிட்டது மிகப் பொருத்தமென்றே தோன்றுகிறது.

மலையாள நாட்டில் ஆல்வாய் என்றும் ஆலப்புழை என்றும் பெயருள்ள ஊர்கள் உள்ளன. இப்பெயர்கள் ஆல் (நீர்) உடன் தொடர்புடைய பெயர்கள் என்று டாக்டர். கே.எம். ஜார்ஜ் அவர்கள் கூறுவது ஏற்கத்தக்கது. மேலும் அவர் கேரளோற்பத்தி என்னும் நூலிலிருந்து "குன்னின்னும் ஆலுக்கும் அதிபதி” என்னும் தொடரை எடுத்து உதாரணங் காட்டுகிறார். ‘குன்றுக்கும் நீருக்கும் தலைவன் என்பது இத்தொடரின் பொருள். எனவே ஆல்வாய், ஆலப்புழை என்னும் ஊர்ப்பெயர்கள், ஆல் (நீர்) தொடர்புடைய பெயர்கள் என்று அவர் கூறுவது பொருத்தமேயாகும்.

மலையாள நாட்டில் ஓர் ஆல்வாய் என்னும் ஊர் இருப்பது போலவே, தமிழ் நாட்டிலும் ஆலவாய் என்னும் ஓர் ஊர் உண்டு. ஆலவாய் என்பது மதுரையின் பழைய பெயர். ஆலவாயில் (மதுரையில்) கோயில் கொண்டவராகிய சிவபெருமானுக்கு ஆலவாய் அண்ணல், ஆலவாயான், ஆலவாய் அரன் என்னும் பெயர்கள் தேவாரம் முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. மதுரை மாநகரத்துக்கு ஆலவாய் என்று ஏன் பெயர் வந்தது? நீர் சூழ்ந்த இடத்திலே இருந்தபடியினாலே ஆலவாய் என்று பெயர் உண்டாயிற்று.

மதுரை மாநகரம் தாமரைப் பூப்போல் வட்ட வடிவமாக அக் காலத்தில் அமைந்திருந்தது. அந்த நகரத்தைச் சூழ்ந்து அகழி நீர் இருந்தது.