உள்ளடக்கத்துக்குச் செல்

புல்லின் இதழ்கள்/அழகு ஆராய்ச்சி

விக்கிமூலம் இலிருந்து
25. அழகு ஆராய்ச்சி

காலை மணி சுமார் பத்து இருக்கும். ஹரி குளித்து சாப்பாட்டை முடித்து, ஏதோ ஒரு பல்லவியைத் தன் மனத்துக்குள் பாடி விரலைக் கூட்டிக் கழித்துக் கொண்டிருந்தான். அப்போது அவன் தங்கியிருந்த தஞ்சை ராஜா சத்திரத்து வாசலில் அழகிய நீல நிறக் கார் ஒன்று வந்து நின்றது.

அதிலிருந்து இறங்கிய காந்தாமணியின் தாயார், ஹரியின் அறை நம்பரை நன்றாக உற்றுப் பார்த்து விட்டு, சாத்தியிருந்த கதவை லேசாக விரல்களினால் தட்டினாள்.

ஹரி கதவை நன்றாகத் திறந்து, காந்தாமணியின் தாயாரை அன்புடன் வரவேற்று, அருகிலிருந்த நாற்காலியில் உட்காரும்படி கேட்டுக் கொண்டான்.

உடனே காந்தாமணியின் தாயார், “என்னை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் காந்தாமணியின் அம்மா. சுவாமி மலைக்கு ஒரு தடவை நானும், என் பெண்ணுமாக வந்திருந்தோம். ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“நன்றாகச் சொன்னீர்கள், நான் உங்களை மறக்கவே இல்லையே- நேற்றுக் கூடத் தெப்பத்தில் உங்களையும், காந்தாமணியையும் பார்த்தேனே!”

“ஆமாம், ஆமாம் உங்களுடைய கச்சேரியைக் கேட்பதற்கென்றே நாங்கள் வந்திருந்தோம். பிரமாதமாகப் பாடினீர்களே! இரவு முழுவதும் பாப்பா உங்கள் பாட்டைப் பற்றியேதான் பேசிக் கொண்டிருந்தாள். இன்று சாயங்காலம், பிருகதீசுவரர் கோவிலில் கச்சேரி இருக்கிறதல்லவா?” என்று காந்தாமணியின் தாயார் கூறிய போதே, ஹரி இடை மறித்து, “ஆமாம், அதுதான் சாப்பிட்டு விட்டுச் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாமென்றிருந்தேன். நீங்களும் வந்தீர்கள்” என்றான்.

“ஆமாம்… ஓய்வு எடுத்துக் கொள்ளுகிற நேரமாயிருக்கும் என்று காந்தாமணியிடம் ஆன மட்டும் சொல்லிப் பார்த்தேன். என்னைப் பிடிவாதமாக அனுப்பி வைத்து விட்டாள்” என்று மன்னிப்புக் கேட்கும் தோரணையில், காந்தாமணியின் தாயார் கூறினாள்.

“பரவாயில்லை, சும்மாச் சொல்லுங்கள்”.

“ஒன்றுமில்லை. இப்போது, உங்களை எப்படியாவது கையோடு வீட்டுக்கு அழைத்து வர வேண்டுமென்று பாப்பா எனக்கு உத்தரவு போட்டாள். இரவு, கோயில் கச்சேரி முடிந்ததும், நீங்கள் அப்படியே ரெயிலுக்குப் போய் விடுவீர்களாம். என்னை வீட்டில் இருக்க விடாமல் துரத்தி விட்டாள். தயவு செய்து இப்போது என்னுடன் வீட்டுக்கு ஐந்து நிமிஷம் வந்து போகச் சௌகரியப்படுமா?” என்று அன்போடும், பணிவோடும் கேட்டாள்.

“முடியாதே” என்று இழுத்தான் ஹரி.

“சரிதான், இதைப் போய், நான் அவளிடம் சொன்னால், என்னை கொன்று விடுவாள். அவளுடைய பிடிவாதம் உங்களுக்குத் தெரியாது.”

“சரி, நாளைக் காலையில் கார் அனுப்புங்கள், வருகிறேன். நான் இரவு கச்சேரி முடிந்ததும், ரெயிலுக்குப் போகப் போவதில்லை. நாளை திருச்சி தேவர் ஹாலில் ஒரு கச்சேரி இருப்பதனால், காலையில் இங்கிருந்துதான் திருச்சி போகிறேன்” என்றான் ஹரி.

இதைக் கேட்டதும்; காந்தாமணியின் தாயார் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது.

“அப்படியானால் ரொம்ப சந்தோஷம். காலையில் கார் அனுப்புகிறேன். தயவு செய்து, அவசியம் வர வேண்டும்” என்று கூறி, விடை பெற்றாள்.

அன்றிரவு கச்சேரியின் போது, பிருதீசுவரர் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கச்சேரி மேடையின் முன் வரிசையில், தன்னுடைய ஒவ்வொரு கச்சேரிக்கும் தவறாமல், விஜயம் செய்யும் ரசிகர்களை ஹரி கண்டான். மேடை மீது ஹரி, ஏறி அமர்ந்ததுமே அவர்கள் ஹரிக்கு வணக்கம் தெரிவித்தனர். அனைவருக்கும் ஹரியும் பதில் வணக்கம் தெரிவித்தான். அந்தக் கச்சேரிக்கு காந்தாமணியும், அவள் தாயாரும் வந்திருந்தனர் என்று சொல்ல வேண்டியதில்லை.

பிருகதீசுவரர் பேரிலுள்ள கிருதிகளை ஹரி மனமுருகிப் பாடிய போது அனைவரும் மெய்ம் மறந்தனர். மகுடியில் கட்டுண்ட நாகம் போல், அவர்கள் இசையில் திளைத்திருந்தனர். சிறுவன் ஒருவன்; யாரோ எழுதிய சீட்டு ஒன்றை ஹரியிடம் கொடுத்தான்.

பிரித்துப் பார்த்தான் ஹரி. அதில் கல்யாணி பாடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. நேற்றுத் தெப்பத்திலும், அவனுக்கு இதே அநுபவம் ஏற்பட்டிருந்தது. ஆனால், கடிதம் வரும் வரை இன்று அவனுக்குக் கல்யாணி பாடுவதாக உத்தேசமில்லை. எனினும் சீட்டு வந்த பிறகு, பாடாமல் மறுக்க மனம் வரவில்லை.

கல்யாணியில் விஸ்தாரமாக ராகம், தானம், பல்லவி பாடி நிறுத்தியதும், எழுந்த கரகோஷம் கோவிலெங்கும் எதிரொலித்தது. நிரவலும், ஸ்வரமும் அவன் பாடிய அழகைக் கண்டு காந்தாமணி பிரமித்துப் போனாள்.

மறுநாள் காலையில், தவறாமல் காந்தாமணியின் வீட்டிலிருந்து கார் வந்து விட்டது. முதல் நாள் கச்சேரி முடிகிற வரை இருந்த காந்தாமணியும், அவள் தாயாரும் ஹரியை, மறு நாள் தங்கள் வீட்டில்தான் சாப்பிட்டாக வேண்டும் என்று உரிமையோடு கூறியபடியால், அவனும் மறுக்க முடியாமல் ஒப்புக் கொண்டான்.

வீடு என்று அழைக்கப்படும் காந்தாமணியின் அரண்மனை போன்ற பங்களாவினுள் ஹரி நுழையும் போதே, பிரமித்துப் போனான். காந்தாமணியின் தாயார் ஹரியை வரவேற்று, நடு ஹாலில் போட்டிருந்த சோபாவில் அமரச் செய்தாள். பிறகு ‘இதோ, வருகிறேன்’ என்று அவசரமாக, உள்ளே சென்றாள். ஹரி எழுந்து, அந்த அழகிய ஹால் முழுவதும் நோட்டம் விட்டான். அழகிய பூனை ஒன்று அறை முழுவதும், உரிமையுடன் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

தவழும் குழந்தையிலிருந்து, பருவப் பெண்ணாகத் திகழும் அன்று வரையில், காந்தாமணியின் பற்பல விதமான புகைப் படங்கள் சுவரில் அழகாகத் தொங்கின. அந்தப் படங்களை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ஹரி, “எல்லாம் என்னுடைய படங்கள்தாம்” என்ற குரலைக் கேட்டுத் திரும்பினான்.

முத்துக்கள் மின்ன, சிரித்தபடியே கையில் காபியுடன் காந்தாமணி அவன் எதிரில் வந்து நின்றாள்.

“உங்கள ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டதற்கு, மன்னிக்க வேண்டும்” என்று காபியை ஹரியிடம் நீட்டி னாள் அவள்.

கை நீட்டிக் காபியை வாங்க வேண்டும் என்ற உணர்வு கூட இல்லாமல், ஹரி காந்தாமணியின் முகத்தையே பார்த்தான்.

மலரின் மென்மையும், பொன்னின் நிறமும், மின்னலின் ஒளியும், தென்றலின் நளினமும் பெற்ற தேவ மகள் போல் அவள் காட்சியளித்தாள். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் அழகைப் பாராதவன் ரசிகனாக இருக்க முடியுமா? - ரசிகத் தன்மை இல்லாதவனிடம் கலைத் தன்மை இருக்குமா? கலைத் தன்மை இல்லாதவனைக் காந்தாமணி கண்ணெடுத்துப் பார்ப்பாளா?

“இந்தாருங்கள், காபி. எவ்வளவு நாழிகையாகக் காத்திருக்கிறேன்? ஆறிப் போய் விடாதா?”

ஹரிக்குச் சூடு பட்டது, “ஆறிப் போனால் போகிறது. கையை வலிக்காதா?” முதல் தடவையாக ஹரி உளறினான்.

பூனை ‘மியாவ்’ என்று பதில் குரல் கொடுத்தது.

கையிலிருந்த காபியைப் பார்த்தபடி, காந்தாமணியின் அழகை சுவைத்த ஹரி பதில் கூறு முன்னர், “நேற்று நீங்கள் பாடிய பாட்டு இன்னும் என் காதுகளில் ரீங்காரம் செய்கிறது ஸார். முந்தாநாள் நானும், அம்மாவும் தெப்பம் பார்க்க வந்திருந்தோம். கச்சேரி முடிந்து உங்களைப் பார்த்து, அம்மாவைக் கொண்டாவது பாராட்டி விட்டு வந்தால்தான், என் மனம் சமாதானம் அடையும் போலிருந்தது. ஆனால், அந்தக் கூட்டத்தில், அம்மாவினால் அது எப்படி முடியும்.” காந்தாமணி குறைப்பட்டுக் கொண்டாள்.

“அதனாலென்ன? பரவாயில்லை. அதுதான் இப்போது வட்டியும், முதலுமாகப் புகழ்ந்து தள்ளி விட்டீர்களே” என்றான் ஹரி.

“நீங்கள் திருச்சியிலிருந்து எப்போது திரும்புவீர்கள்?”என்று காந்தாமணியின் தாயார் கேட்டாள்.

“ஏன்? கச்சேரி முடிந்ததும், மறு ரெயிலிலேயே புறப்பட வேண்டியதுதான். எனக்கு அங்கே வேற என்ன வேலை?” என்றான் ஹரி.

“அப்போ சரி, பஞ்சாங்கம் தருகிறேன். ஒரு நல்ல நாள் பாருங்கள். நீங்கள் திருச்சியிலிருந்து வந்ததுமே, இவளுக்குப் பாடம் ஆரம்பித்து விட வேண்டும். மாசம் நீங்கள் கேட்டதைத் தந்து விடுகிறேன். அப்போதுதான் இவள் வாய் ஓயும்” என்ற காந்தாமணியின் தாயார், சுவரில் மாட்டியிருந்த பஞ்சாங்கத்தை ஹரியின் கையில் கொடுத்தாள்.

ஹரிக்குத் ‘திக்’கென்றது. ‘இதற்காகவா இத்தனை பூர்வ பீடிகையும், உபசாரமும்?’ ஹரி யோசனையில் ஆழ்ந்தான்.

கண்கள்தாம் பஞ்சாங்கத்தில் பதிந்திருந்தனவேயன்றி, மனம் குருநாதரையே சுற்றியது.

—தாயாரும் பெண்ணுமாகக் காரைப் போட்டுக் கொண்டு சுவாமி மலைக்கு வந்ததும், இதே காந்தாமணிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தன் குருநாதர் மறுத்ததும், அவர்கள் மனமுடைந்து வெளியேறியதும், அவன் மனத்திரையில் நிழற்காட்சிகள் போல் ஓடின.

குருநாதருக்குத் தெரிந்தால், அவர் இதற்கு ஒப்புக் கொள்வாரோ மாட்டாரோ; ஆனால், இந்தச் சமயத்தில், பணத்தின் தேவை எவ்வளவு முக்கியமாக இருக்கிறது. இன்னும் அவர் குணமாக, எத்தனை மாதம் ஆகிறதோ! அது வரை கச்சேரியை மட்டும் நம்பிக் கொண்டிருக்கலாமா? அப்படியே தனக்குக் கச்சேரிகள் வந்தாலும், தேவை அதை விட அதிகமாக அல்லவா இருக்கிறது. இப்படியொரு நிரந்தர வருமானத்துக்கு வழி செய்து கொண்டால், மனத்துக்கு நிம்மதியாக இருக்குமல்லவா?—

“என்ன சார், எனக்கு என்றவுடன் பஞ்சாங்கத்தில் நாள் கூட அகப்பட மாட்டேன் என்கிறதா? ரொம்ப நேரமாகப் பார்க்கிறீர்களே?” காந்தாமணி கலகலவென்று நகைத்தபடிக் கேட்டாள்.

“பஞ்சாங்கத்தில் நாளுக்கென்ன பஞ்சம்? யாருக்கு வேண்டுமானாலும், கிடைத்து விடுகிறது. எனக்குத்தான் வந்து சொல்லிக் கொடுக்க முடியுமா என்று யோசிக்கிறேன்” என்றான் ஹரி.

“பாரம்மா, கடைசியில் இவர் சொல்லுகிறதை” காந்தாமணி இரைந்து தாயாரிடம் முறையிட்டாள்.

“நீ சும்மா இரம்மா. நான் பார்க்கிறேன்” என்று உள்ளே சென்ற காந்தாமணியின் தாயார் மறு நிமிஷம், ஒரு தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, பழம், புஷ்பங்களை வைத்து எடுத்துக் கொண்டு வந்து, பெண்ணின் கையில் கொடுத்தாள். அதைக் கையில் பெற்றுக் கொண்ட காந்தாமணி,. ஹரியின் பாதத்தில் வைத்து வணங்கி எழுந்தாள.

ஹரி திடுக்கிட்டு எழுந்தான். “இதெல்லாம் என்ன காந்தாமணி? எழுந்திரு. நான் என்ன, சொல்லிக் கொடுக்க மாட்டேன் என்றா சொன்னேன்? ஆனால், எதற்கும் என் குருநாதரிடம் ஒரு வார்த்தை கேட்காமல், ஒப்புக் கொள்ளலாமா? இன்று திருச்சி கச்சேரி முடிந்ததும், ஊருக்குச் சென்று, எல்லா விபரத்துக்கும் உங்களுக்கு எழுதுகிறேன்” என்றான்.

உடனே காந்தாமணி கேட்டாள்: “குரு கூடாது என்றால்; நீங்கள் எனக்குச் சொல்லிக் கொடுக்க மாட்டீர்கள் இல்லையா?”

“எப்படியாவது, உனக்கு நான் பாட்டுச் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்கிறேன்; போதுமா?”

“முயற்சி செய்தால் போதாது. நிச்சயமாகச் சொல்லித் தர வேண்டும்.”

“சத்தியம் வேண்டுமானால், செய்து தரட்டுமா”. ஹரியினுடைய இந்த வார்த்தைகளைக் கேட்டதும், காந்தாமணியின் உள்ளத்தில் நம்பிக்கையும், அதே சமயம் நாணமும் படிந்து, அவளது முகம் குங்குமம் போல் சிவந்தது.

ஹரி, சுவரிலிருந்த கடிகாரத்தை ஏறிட்டுப் பார்த்ததும், “சத்திரத்துக்குப் போய், சாமான்களை எடுத்து கொண்டு புறப்படுவதற்குத்தான் நேரம் இருக்கும் போலிருக்கிறது” என்று புறப்பட்டான்.

காந்தாமணியின் தாயார் ஒரு பையில், தட்டிலிருந்த சாமான்களையெல்லாம் போட்டுக் காரில் கொண்டு வந்து வைத்து, டிரைவரிடம், “இவரைக் கூட இருந்து பத்திரமாக ரெயில் ஏற்றி விட்டு வா, கோபால்” என்று உத்தரவிட்டாள்.

கார் புறப்படும் போது, காந்தாமணி வாசற்படிவரை வந்து வழி அனுப்பினாள்.

சத்திரத்திலிருந்த பெட்டி படுக்கைகளை எல்லாம், கோபால் காரில் ஏற்றி விட்டான். தம்பூராவைக் கையில் எடுத்துக் கொண்டு அறையைப் பூட்டப் போன ஹரி, மறு கணம் திடுக்கிட்டுத் திரும்பினான். வாசற்படியினருகில் பக்கிரி நின்று கொண்டிருந்தான்.

“இங்கே எங்கே வந்தாய்?” என்று ஹரி, சற்று அதிருப்தியோடு கேட்டான்.

“மாரியம்மன் கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னை அக்காவும், பார்த்துட்டு வரச் சொல்லிச்சு. பாத்துட்டுப் போகலாம்னும் வந்தேன்.”

“நான் இங்கே இருக்கேன்னு உனக்கு யார் சொன்னது?”

“ஒருத்தர் சொல்லணுமா? மானேஜர் ரூம்லே போய் போர்டைப் பார்த்தா, தானே வந்து போனவங்க பேரு தெரியுது. இங்கே இல்லேன்னா, திருச்சிக்குப் போயிட்டேன்னு நினைச்சுக்கறேன்.”

“ஓகோ, அதுவுங்கூட உனக்குத் தெரியுமா? ஆமாம், கச்சேரியை எண்ணிக் கொண்டிருந்தால்தானே பங்கு வாங்க முடியும்? ஏராளமாய்ச் செலவு செய்து, என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் இல்லையா!”

“இந்தா ஹரி, நீ இப்படி ஏதோ எனக்கு இனாம் கொடுக்கிறாப் போலே, ஒவ்வொரு வாட்டியும் பேசறதானா, இந்த வசூல் பண்ற வேலை எனக்கு வேணாம். முடியாதுன்னு அக்கா கிட்டேயே கண்டிச்சுச் சொல்லிப்பிடறேன். ஏதோ, அது சாப்பாட்டுக்கு இல்லேன்னு சொல்லி அனுப்பிச்சுது; நான் வந்தேன்,”

“மாமா, இப்படி நீ என்னிடம் பேசுவதால், ஒரு பிரயோசனமும் இல்லை. கச்சேரிக்குப் போய்ப் பாடுவதற்கு முன்னாலேயே பணத்துக்கு வந்து நின்றால், நான் எங்கே போவேன்? மாரியம்மன் கோயிலில், நான் பணத்துக்காகப் பாடவில்லை; பிரசாதத்துக்குத்தான் பாடினேன். அது எனக்குப் பணத்துக்கு மேலே பெரிசு. வீட்டிலே பசி என்றால், இந்தப் பழங்களையெல்லாம் சாப்பிடட்டும், கச்சேரிக்குப் போய் வந்த பிறகு வா; ஏதாவது தருகிறேன். இப்போது என்னிடம் காலணா கிடையாது” என்று கூறிக் கொண்டே ஹரி, காந்தாமணி வீட்டில் கொடுத்த பழங்களை எல்லாம், பக்கிரி நீட்டிய துண்டில், “இந்தா” என்று தலை கீழாகக் கொட்டினான்.

ஆனால் அதே சமயம், பையிலிருந்த அந்தப் பழங்களுக்கு மத்தியிலிருந்து, இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களும் சேர்ந்து விழவே, பக்கிரி லபக்கென்று பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டான்.

“தம்பி, நீ பெரிய ஆளப்பா! கை நிறையப் பணத்தை வெச்சுக்கிட்டுத்தானே, இப்போ என்கிட்டே காலணா கூடக் கிடையாதுன்னு பொய் சொன்னே. பரவாயில்லே, கோயில்லே இருநூறு ரூபாய் கொடுத்திருக்காங்களே” என்று பக்கிரி கூறிக் கொண்டிருக்கும் போதே, காரிலிருந்த கோபால், ரெயிலுக்கு நேரமாகி விட்டதை அறிவிக்க வண்டியிலிருந்தபடி ‘ஹார்ன்’ அடித்தான். ஆனால், இதொன்றும் காதில் விழாமல், சிலை போல் ஹரி அப்படியே பிரமித்து நின்று கொண்டிருந்தான்.