உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

நற்றிணை தெளிவுரை


இரவின்கண்ணே ஒலிக்கும் குளிர்ந்த கடலினிடத்தே, மிக்க பந்தங்களைக் கொளுத்திக் கொண்டவராக, எம் ஐயன்மாரும் மீன் வேட்டையின் பொருட்டாகப் போயுள்ளனர், அதனாவே, பொங்கியெழும் பிசிரையும் முழவொத்த ஒலியையும் கொண்டவாக அலைகள் எழுத்து மோதி உடைகிள் கடற்கரைப் பாங்கிலேயுள்ள, தங்குதற்கினிய எம் ஊருக்கு எம்முடன் வந்தீராய்த் தங்கியிருப்பீரானால், எதுவும் குறை உண்டாகுமோ?

கருத்து : 'இரவிலே எம்மூரிலுள்ள எம் இல்லிடத்துத் தங்கிப் போதலாம்' என்பதாம்.

சொற்பொருள் : செழுங்கதிர் – செழுமையான கதிர்கள்; செழுமை ஒளியின் செழுமையையும், வெப்பத்தின் செழுமையையும், அதனால் உலகுக்கு உண்டாகும் நன்மையின் செழுமையையும் குறிக்கும். மால் வரை – பெருமலை; மேற்கு மலை. வெண்கோடு – வெண் குன்று; மணற்குன்று; உப்பின் குவையும் ஆம். இறை கொள்ளல் – தங்குதல், மாமலர் – கரியமலர். கரப்ப – மறைய. 'சுடர்' - தீப்பந்தங்கள். பிசிர் – நுண் திவலை.

விளக்கம் : 'குருகு இறைகொண்டன' என அவையும் தம் உறைவிடத்துச் சென்று தங்குமாறு போலத் தலைவனும் தங்குதற்குரியன் என அவனது கடமை உணர்த்துகிறாள். 'எமரும் வேட்டம் புக்கனர் எனக் கூடுதற்கான செவ்வியும், 'உறைவின் ஊர்' என ஊரது இனிமைச் செறிவும் உரைத்து அவனைத் தங்கிபோக என்கின்றாள். மணந்த பின்னரன்றி அவளுரில் அவளில்லிடத்து அவளோடுங்கூடி இன்புறுதல் வாயாது ஆதலின், அவன் மனம் விரைய மணந்து கோடலிற் செல்லும் என்பதாம். "துறை புலம்பின்றாதலின் நீ செல்லுதலை அனைவரும் அறிவர். கழியிடைச் சுறாவழங்குதலின் நின் குதிரைகட்கு ஏதமாம். தங்கும் குருகிணம் கலைந்து ஆர்ப்பரித்தலால் அலருரை உண்டாதல் கூடும். வேட்டம் புக்க எமர் நின்னைக் காண நேரின் துன்புறுத்தலையும் செய்வர்' என அச்சுறுத்தி இவைபற்றி எண்ணாது இவளுடன் கூடியின்புறுவதற்கு ஏற்ற வகையால் இவளை மணந்து கொள்க" என்கின்றாள்.

மேற்கோள் : 'இரவுக்குறி வேண்டிய தலைவற்குத் தோழி உடன்பட்டுக் கூறியது' என் நச்சினார்க்கினியர் காட்டுவர். (தொல். பொருள், சூ 114 உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/135&oldid=1678122" இலிருந்து மீள்விக்கப்பட்டது