உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

133


வெம்மைக் காற்றாதாய் வருந்துமாயின், வம்புழுதியிடை நடந்துபோகும் தன் மகளது நிலைமைதான் என்னாகுமோ?' எனக் கலங்கியதும் இதுவாகும்.

67. தங்கினால் என்னவோ?

பாடியவர் : பேரி சாத்தனார்.
திணை : நெய்தல்.
துறை : பகற்குறி வந்து நீங்குந் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.

[(து–வி.) பகற்குறி வந்தொழுகும் தலைவனை இரவின்கண் எம்மூரில் தங்கிச் செல்க' எனக் கூறுவாளாய், அஃது இயையாமையின் மணந்து கொள்ளலே தக்கதென உணருமாறு இவ்வாறு கூறுகின்றாள் தோழி.]

சேய்விசும்பு இவர்ந்த செழுங்கதிர் மண்டிலம்
மால்வரை மறையத் துறைபுலம் பின்றே
இறவுஅருந்தி எழுந்த கருங்கால் வெண்குருகு
வெண்கோட்டு அருஞ்சிறைத் தாஅய்க் கரையக்
கருங்கோட்டுப் புன்னை இறைகொண் டனவே; 5
கணைக்கால் மாமலர் கரப்ப, மல்குகழித்
துணைச்சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை
எல்லிமிழ் பனிக்கடல் மல்குசுடர்க் கொளீஇ
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
தங்கின் எவனோ தெய்ய; பொங்குபிசிர் 10
முழவுஇசைப் புணரி எழுதரும்
உடைகடற் படப்பைஎம் உறைவின் ஊர்க்கே?

செவ்வானத்தே ஊர்ந்து செல்லும் செழுமையான கதிர்களைக்கொண்ட ஞாயிற்று மண்டிலம், பெரிதான மலைப்பின்னாகச் சென்று மறைய, அதனால் மக்களியக்கம் அற்றுப்போன கடற்றுறையும் தனிமையுடையதாய் ஆயிற்று. இறாமீனைத் தின்று வானில் எழுந்த கருங்கால்களையுடைய வெண்மையான நாரைகளும், வெள்ளிய மணற்குன்றின் மேலமர்ந்து தம் அரிய சிறைகளை வீசிப் புலர்த்தியபின்னர், கரையிடத்துள்ள கருங்கிளைகளையுடைய புன்னை மரங்களிலே சென்று தங்குவன ஆயின. திரண்ட தண்டினைக்கொண்ட கரிய மலரானது மறையும்படியாக, நீர் பெருகும் கழியிடத்தே சுறா மீன்கள் தத்தம் துணையோடும் கூடியவாய் இயங்குதலையும் மேற்கொண்டன. அவ்விடத்தே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/134&oldid=1678117" இலிருந்து மீள்விக்கப்பட்டது