உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

159


சூட்டும் தாரும் நமக்குத் தந்தான்" என்று கருதினாள். கழலணிந்து விளங்கியவரான பிற ஆயமகளிரோடு, தகுதி கொண்ட நாணமும் தன்னைத் தடை செய்யத் தைத்திங்களின் முதல்நாளிலே, குளிர்ந்த பொய்கையிடத்தே சென்று நீராடும் பெருத்த தோள்களையுடைய இளமகள் அவள். அவளல்லாது, யான் அடைந்த இந்த நோயினைப்போக்குதற்கான மருந்து தானும் பிறிது யாதொன்றும் இவ்வுலகிலே இல்லை. நெஞ்சமே! இனி யாம் யாது செய்வோமோ?

கருத்து : "எம் இந்த நோயின் தகைமையை அவள் தோழியும் உணர்ந்தாளில்லையே?" என்பதாம்.

சொற்பொருள் : மன்றம் – வீட்டு முற்றம். குறுமாக்கள் - மாடு மேய்க்குஞ் சிறார்; பால் கறந்ததன் பின்னர்க் கன்றுகளை வீட்டிலே விட்டுவிட்டு, மாடுகளை மேய்த்தற்கு ஓட்டிச் செல்வர் என்க. பெரும்புலர் விடியல்–பேரிருள் புலர்கின்ற விடியல்: அதிகாலை இருளுக்குப் பேரிருள் என்பது பொருத்தமாதலின் இப்படிக் கூறினான். தகுநாண்–தகுதி கொண்ட நாணம்; போலியாக நாணமுடைமை காட்டும் தோற்றம் அன்று என்பதாம். குறுமகள் - இளையோளாகிய தலைவி.

விளக்கம் : 'மன்றம்' என்றது, வீட்டின் தொழுவிடத்துப் பொதுவிடத்தைக் குறிக்கும். அவளால் வந்துற்ற நோயாதலினாலே, இதற்கு மருந்தும் அவளேயன்றிப் பிறிதொன்றும் இல்லை' என்பான், 'மருந்து பிறிதில்லை" என்கின்றான். தைத்திங்களில் நீர் குளிர்ச்சிமிகக் கொண்டதாயிருப்பது பற்றித் 'தைத்திங்கள் தண்கயம்' என்றான். 'பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்த், தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' என வரும் குறுந்தொகையடிகளும் (196), 'தைஇத் திங்கள் தண் கயம்போல' என வரும் புறநானூற்று அடியும் (70-6) இதனை வலியுறுத்தும். 'தமக்கு நல்ல கணவனை வேட்டு நோன்பு பூண்ட மகளிர், தைமுதல்நாள் நோன்புகழித்து நீராடச் செல்வர்; அவ்வேளை இவனைக் கண்டாள். 'இவனே தனக்குத் தெய்வந்தந்த காதலன்' எனக் கருதி ஏற்றாள்' என்க. அதனையுணர்ந்து உதவுங் கடப்பாடு உடையவளான தோழி, அதனை மறுத்து, அவனை ஒதுக்குதற்கு நினைதல் பொருத்தமற்றதாகும் என்பதும் கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/160&oldid=1679150" இலிருந்து மீள்விக்கப்பட்டது