உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

183


உண்பித்துச் செல்லும் களிற்று ஒருத்தலைக் கண்டிருப்பர்; கண்டிருந்தும், அதற்குள்ள மனைமாண்பு தம்பால் இல்லாதாராய் நம்மை மறந்தனரே! ஆதலின், அவர் மிகுதியும் அன்பற்றார் என்று பழிக்கிறாள் தோழி.

பிடியினது வேட்கையைக் களிறு தணிக்கும் செவ்வியைச் சான்றோர் பலரும் காட்டுவர். 'பிடி பசி களைஇய பெருங்கை வேழம், மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின, தோழி! அவர் சென்ற ஆறே' எனக் குறுந்தொகையுட் பாலைபாடிய பெருங் கடுங்கோ கூறுவர். (குறு.37.2-4), களிறு தன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது, நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி, வெண்ணார் கொண்டு கைசுவைத்து, அண்ணாந்து அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் (குறு. 307); புன்றலை மடப்பிடி உணீ இயர் அங்குழை நெடுநிலை யாஅம் ஒற்றி, நினைகவுள் படிஞிமிறு கடியும் களிறே' (அகம். 54) எனவும் வரும்.

93. பிரிந்தோர் இரங்கும் நாடு!

பாடியவர் : மலையனார்.
திணை : குறிஞ்சி.
துறை : கடாயது

[(து–வி.) தலைவியை வரைந்து மணக்கக் கருதானாய்ப் பலகாலும் பகற்குறியே வேட்டு வருவானாகிய தலைவனுக்கு, வரைந்துவந்து தலைவியை மணந்து போகுமாறு அறிவுறுத்துகின்றாள் தோழி.]

'பிரசம் தூங்கப் பெரும்பழம் துணர்
வரைவெள் அருவி மாலையின் இழிதரக்
கூலம் எல்லாம் புலம்புஉக நாளும்
மல்லற்று, அம்ம இம் மலைகெழு வெற்'பெனப்
பிரிந்தோர் இரங்கும் பெருங்கல் நாட; 5
செல்கம்; எழுமோ: சிறக்கநின் ஊழி!
மருங்கு மறைத்த திருந்துஇழைப் பணைத்தோன்
நல்கூர் நுசுப்பின் மெல்லியல் குறுமகள்
பூண்தாழ் ஆகம் நாண்அட வருந்திய
பழங்கண் மாமையும் உடைய; லழங்குகுரல் 10
மயிர்க்கண் முரசினோரும் முன்
உயிர்க்குறி யெதிர்ப்பை பெறல்அருங் குரைத்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/184&oldid=1685925" இலிருந்து மீள்விக்கப்பட்டது